நில அளவையில் பயன்படுத்தப்படும் வழிமுறைகள்
‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் கீழ் நில ஆவணங்களை நவீன மயமாக்கும் திட்டம் (Digital India Land Records Modernization Programme DILRMP) நில அளவை பதிவேடுகள் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நிலம் சம்பந்தமான ஆவணங்களை நிர்வகிப்பதில் நவீன, துல்லியமான வெளிப்படை தன்மையை உருவாக்கி, மாவட்டத்தின் நில உரிமையை முறைப்படுத்தி, இறுதி செய்வது அதன் நோக்கம் ஆகும்.
இத்திட்டத்தின் கீழ், நில ஆவண மேலாண்மை மையங்கள் (Land Records Management Centre LRMC) உருவாக்குதல், நில ஆவணங்களை கணினி மயமாக்குதல், நத்தம் மற்றும் நகர தரவுகளை பதிவேற்றுதல், புலப்படங்களை கணினிமயமாக்குதல், நில ஆவணங்களை இணைய செயலிகளால் நிர்வகித்தல், DGPS (Differential Global Positioning System) மற்றும் RTK (Real time kinematic) ஆகிய கருவிகளை கொண்டு, தொடர்ச்சியாக இயங்கும் குறிப்பறியும் கருவி அமைத்து CORS (Continuously Operating Reference Station) அதன் மூலம் நவீன நில அளவை பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. தற்போது நில அளவையில் பயன்படுத்தப்படும் சில வழிமுறைகள் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.
‘டிராவர்ஸ் சர்வே’ நில அளவை முறை
மாவட்டம், வட்டம், கிராமம் போன்றவற்றின் பரப்பளவு கணக்கிடும்போது அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக உள்ள பரப்பு பிழைகளை தவிர்க்க உதவும் முறை ‘டிராவர்ஸ் சர்வே’ (Traverse Survey or Theodolite Method) ஆகும். பரப்பு பிழை கண்டறிய, சம்பந்தப்பட்ட இடத்தை சிறிய சுற்றுப்பகுதிகளாக (Minor Circuit) பிரித்து, அதை கோண அளவைக் கருவி (Theodolite) மூலம் அளக்கப்படும். அவ்வாறு அளந்து, நீள் சதுர கணித முறையில் (Gale’s Traverse Table) கச்சிதமாக பரப்பளவு கணக்கிடப்படும்.
இந்த முறையில், அனுமதிக்கப்பட்ட பரப்பு பிழைகளுக்கு உட்பட்டு அளவீடுகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. தமிழக அளவில் சங்கிலி (chain) மற்றும் நேர் கோணக் கட்டை (cross staff) கொண்டு அளவீடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்தகைய அனைத்து சர்வே எண்களும், சிறிய அளவுள்ள சுற்றுப் (Minor Circuit) பகுதிகளாக பிரித்து கணக்கீடு செய்வதன் மூலம், நிர்ணயிக்கப்பட்ட பரப்பளவுகளின் கூட்டு மதிப்பானது, அனுமதிக்கப்பட்ட பரப்பு பிழைக்கு உட்பட்டிருப்பது உறுதி செய்யப் படும். இந்த முறையில் எந்த பகுதியில் அதிக பரப்புப்பிழை உள்ளது என்பதை எளிதாக அறிய இயலும்.
எளிய முக்கோண அளவை முறை
இந்த முறையில் நில உரிமையாளர்கள் குறிப்பிடும் அனுபவ எல்லைகளை கணக்கில் கொண்டு, அந்த நிலங்களின் எல்லை வளைவுகள் அனைத்தையும் ஒவ்வொரு முக்கோணமாக அமைத்துக்கொள்ளப்பட்டது. பின்னர், அவை நில அளவை புலங்களாக (Survey Fields) அளவீடு செய்யப்படும். கணக்கிட எளிமையாக உள்ள இந்த வழிமுறை, எளிய முக்கோண அளவை முறை (Simple Triangletion Method) என்று குறிப்பிடப்பட்டது. இந்த முறையில் அனைத்து வளைவுகளுக்கும் கற்கள் நடப்பட்டன. மேலும், அவற்றிற்கான வரைபடங்கள் நிதானமாக உருவாக்கப்பட்டு நிலங்கள் கச்சிதமாக கணக்கீடு செய்யப்பட்டன.
புங்கனூர் அளவை முறை
இந்த முறையிலும் நில உரிமையாளர்களின் அனுபவ எல்லைகளை அனுசரித்து, எல்லை வளைவுகளில் கற்கள் நடப்பட்டன. அவற்றை உட் பிரிவுகளாக (Subdivisions) கொண்டு, நில அளவை புலத்தின் ஏதாவது இரு முனைகளில் அளவீடு செய்வதற்கான கற்கள் நடப்பட்டன. அந்த இரு கற்களுக்கும் இடைப்பட்ட கற்பனை கோட்டின் ஒவ்வொரு வளைவுகளுக்கும் (Cross Staff) செங்குத்து அளவீடு செய்யப்பட்டது. இந்த முறை புங்கனூர் (Punganoor Method or Ray System) அளவை முறை என்று சொல்லப்பட்டது. இதில், ஒவ்வொரு வளைவுகளுக்கும் கற்கள் நடப்பட்டன. வரைபடங்கள் தயாரிப்பில் நிதானமாக செயல்பட்டு துல்லியமாக கணக்கீடு செய்யப் பட்டன.
மூலை விட்டம் மற்றும் செங்குத்து அளவு முறை
இந்த முறையிலும் நிலத்தின் உரிமையாளர்கள் குறிப்பிடும் நிலத்திற்கான அனுபவ எல்லைகளை அனுசரித்து, உட்பிரிவுகளாக (Subdivisions) பிரிக்கப்படும். இந்த முறையில், நிலங்களில் நன்செய் வகையில் ஐந்திலிருந்து பத்து ஏக்கருக்கு மிகாமலும், புன்செய் வகையில் பத்து ஏக்கரிலிருந்து இருபது ஏக்கர் வரையிலும் மிகாதவாறு கணக்கிடப்படும். அவை ஒவ்வொன்றின் நில அளவை புலங்களுக்கும், அவற்றின் முச்சந்திகளுக்கு மட்டும் கற்கள் நடப்பட்டு, நிலங்களின் வளைவுகளுக்கு, செங்குத்து அளவு குறிப்பிடப்பட்டு அளவீடு செய்யப்பட்டது. இந்த முறையானது மூலை விட்டம் மற்றும் செங்குத்து அளவு (DiagonalOffset System) என்று குறிப்பிடப்படுகிறது.
Related Tags :
Next Story