கட்டிடங்களின் உறுதியை நிர்ணயிக்கும் மண்ணின் தன்மை
கட்டுமான அமைப்புகள் எவ்வகையாக இருந்தாலும் அவற்றின் நீடித்து நிற்கும் திறன் அதாவது ஆயுள் 50 ஆண்டுகள் என்று பொதுவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கட்டுமான அமைப்புகள் எவ்வகையாக இருந்தாலும் அவற்றின் நீடித்து நிற்கும் திறன் அதாவது ஆயுள் 50 ஆண்டுகள் என்று பொதுவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு கட்டிடம் நீடித்து நிற்க வேண்டுமானால் அதன் அஸ்திவாரம் உறுதியாக அமைய வேண்டும். அதன் அடிப்படையில், ஒரு கட்டுமானத்தின் அஸ்திவார அமைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள மண்ணின் தன்மையை கவனத்தில் கொள்வது அவசியம். மேலும் கட்டமைப்பு பொறியாளர் களின் தொழில்நுட்ப ஆலோசனைகளையும் பெற வேண்டும் என்றும் கட்டுமான வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
மண்ணின் வகைகள்
தமிழக அளவில் 5 வித பொதுவான மண் வகைகள் அமைந்துள்ளன. அவை, செம்மண் (62 சதவிகிதம்), வண்டல் மண் (16 சதவிகிதம்), கரிசல் மண் (12 சதவிகிதம்), சரளை மண் (3 சதவிகிதம்) மற்றும் மணல் பாங்கான மண் (7 சதவிகிதம்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் தமிழகத்தின் மண் அமைப்பை 8 வகைகளாக பிரித்துள்ளது. அவை, வண்டல், கரிசல், செம்மண், சரளை, பாலை மண், மலை மண், உவர் மண், சதுப்பு நில மண் ஆகியவையாகும்.
வடகிழக்கு மண்டலம்
தமிழகத்தின் வடகிழக்கு மண்டலமான காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு, கடலூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் மணற்பாங்கான செம்மண், களிமண், உவர் மண், கடற்கரையோர வண்டல் மண் ஆகிய நிலைகளில் மண்ணின் தன்மைகள் அமைந்துள்ளன. தமிழகத்தின் இதர பகுதிகளில் செம்மண், கரிசல், சரளை உள்ளிட்ட மண் வகைகள் அமைந்துள்ளன.
சென்னையின் மண் அமைப்பு
சென்னையை பொறுத்தவரை களிமண், மென்பாறை மண், மணற்பாங்கான பாறை அமைப்பு ஆகிய வகைகள் அமைந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் அதாவது, மணலி, கொளத்தூர், மதுரவாயல், கே.கே நகர், செம்மஞ்சேரி, ஆலப்பாக்கம், வியாசர்பாடி மற்றும் அண்ணா நகர் மற்றும் அவற்றின் சுற்றுப்புற பகுதிகள் ஆகியவை களிமண் பூமியாக அமைந்துள்ளன.
ஓரளவு கெட்டியான தன்மை கொண்ட மண், ஆற்றங்கரை மற்றும் கடலோர பகுதிகளான திருவொற்றியூர், ஜார்ஜ் டவுன், மாதவரம், புதுவண்ணாரப்பேட்டை, சேப்பாக்கம், மைலாப்பூர், போரூர், அடையார், பெசன்ட் நகர் மற்றும் உத்தண்டி ஆகியவற்றின் சுற்றுப்புற பகுதிகளில் அமைந்துள்ளன.
பாறை படிவுகளுடன் கூடிய மண் அடுக்குகள் கிண்டி, நங்கநல்லூர், பள்ளிக்கரணை, ஆலந்தூர், ஜலதாம்பேட்டை, வேளச்சேரி, ஆதம்பாக்கம், சைதாப்பேட்டை மற்றும் பெருங்குடி ஆகியவற்றின் சுற்றுப்புற பகுதிகளில் அமைந்துள்ளன. மண் வகைகள் பற்றி அறிந்து கொண்ட பின்னரே கட்டுமானத்திற்கான அஸ்திவார அமைப்பு பற்றிய வரைபடத்தை வடிவமைப்பு பொறியாளர்கள் நிர்ணயம் செய்வார்கள். அதன் அடிப்படையில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் அமைந்துள்ள மண்ணின் நிலை பற்றி அறிந்து கட்டிடங்களை அமைப்பதே பாதுகாப்பானது.
Related Tags :
Next Story