கட்டிட அமைப்புகளை ஆட்சி செய்யும் எட்டு திசை தேவர்கள்


கட்டிட அமைப்புகளை ஆட்சி செய்யும் எட்டு திசை தேவர்கள்
x
தினத்தந்தி 6 March 2021 6:31 AM GMT (Updated: 2021-03-06T12:01:14+05:30)

பூமியில் அஸ்திவாரம் அமைத்து கட்டப்படும் அனைத்து கட்டுமானங்களும் பஞ்ச பூதங்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருப்பதாக வாஸ்து சாஸ்திரம் குறிப்பிட்டுள்ளது.

பஞ்ச பூத சக்திகளை முறைப்படுத்தி நல்ல பலன்களை அடைவதற்காக, எட்டு திசைகளையும் அடிப்படையாக கொண்டு, கட்டுமான வடிவமைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. வாஸ்து ரீதியாக எட்டு திசைகளை ஆளும் தேவர்கள் மற்றும் உப தேவர்கள் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

இந்திர திசை

கிழக்கு திசை இந்திரனுக்கு உரிய திசையாகவும், சூரியன் உதிக்கும் திசையாகவும் இருப்பதால் மற்ற எல்லா திசைகளையும் விட அதிக முக்கியத்துவம் பெறுகிறது. கிழக்கு திசையின் கடவுளர்கள் ஈசானன், பர்ஜன்யன், ஜயந்தன், இந்திரன், சூரியன், ஸத்யன், பிருசன், அக்னி, வாயு ஆகிய ஒன்பது பேர்கள் ஆவார்கள். அவர்களில் இந்திரன் முதன்மை பெற்றவர் என்பதால், கிழக்கு திசையில் தலைவாசல் கொண்ட வீடுகள் புகழும், செல்வ வளமும் பெறுவதாக ஐதீகம்.

அக்னி திசை

ஆக்கினேயம் என்று சொல்லப்படக்கூடிய, கிழக்கு-தெற்கு ஆகிய இரு திசைகளுக்கு இடையில் அமைந்த தென்கிழக்கின் அதிபதி அக்னி ஆவார். வீடுகளின் இத்திசை அக்னிக்கு உரியது என்பதால் சமையலறை, மின்சாரம் சார்ந்த அமைப்புகள் ஆகியவற்றுக்கு உரிய பகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எம திசை

தெற்கு திசையின் பிரதான அதிபதி எமன் ஆவார். அவருடன் சேர்த்து பூஷா, விததன், கிருகக்‌ஷதன், கந்தர்வன், பிருங்கராஜன், மிருகன் ஆகிய ஏழு கடவுளர்கள் இத்திசையில் உள்ளனர். தென் திசை நோக்கி சுப காரியங்கள் செய்வது ஐதீகமாக கடைபிடிக்கப்படுவதில்லை.

நைருதி திசை

தெற்கு-மேற்கு ஆகிய இரண்டு திசைகளுக்கும் இடைப்பட்ட பகுதியான தென்மேற்கின் அதிபதி நிருதி (நைருதி) ஆவார். அரக்க குணம் படைத்த நிருதிக்கு உரிய இந்த திசை சுப பலன்களை அளிப்பதில்லை. வீட்டின் தென்மேற்கு திசையான நிருதியில் கனமான பொருட்களை வைப்பது, மேல்நிலை தண்ணீர்த் தொட்டி மற்றும் படுக்கையறை ஆகியவை அமைக்க ஏற்றது.

வருண திசை

மேற்கு திசை வருணனுக்கு உரியது. மழை மற்றும் நீர் ஆகியவற்றிற்கு உரிய மேல் திசை கடவுளர்களில் வருணன் முக்கியமானவர். மேற்கு திசை கடவுளர்கள் பித்ரு, தவ்வாரிக, சுக்ரீவ, புஷ்பதந்த, வருணன், அசுர, சோஷ, பாப, ரோக ஆகிய ஒன்பது பேர்களில், ரோக, பாப. அசுர, தவ்வாரிக, பித்ரு ஆகியோர் அசுப தன்மை பெற்றவர்கள். சுக்ரீவ, புஷ்பதந்த, வருணன், சோஷ ஆகியோர்கள் சுபத்தன்மை பெற்றவர்கள்.

வாயு திசை

மேற்கு-வடக்கு ஆகிய இரு திசைகளுக்கு இடையில் அமைந்த வடமேற்கு திக்கின் அதிபதி வாயு ஆவார். காற்று, இப்பகுதியில் நுழைவதைத் தடுக்கும் விதத்தில் உயரமான மரங்களை இப்பகுதியில் வளர்ப்பது, இந்த பகுதியில் உள்ள வீட்டின் மேல்தளத்தை உயர்த்திக் கட்டுவது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்.

குபேர திசை

வடக்கு திசையின் பிரதான கடவுள் செல்வத்திற்கு அதிபதியான குபேரன் ஆவார். வடக்கு திசைக்கு திதி, அதிதி, உதிதி என்ற பெயர்கள் உண்டு. சர்ப்ப, சோம, பல்லாட, முக்கிய, அஹி ஆகிய ஐந்து கடவுளர்கள் வடக்கு திசையில் உள்ளனர். வாஸ்து ரீதியாக வடக்கு சுப திசையாக கருதப்படுவது ஐதீகம்.

ஈசான திசை

வடக்கு-கிழக்கு ஆகிய இரு திசைகளுக்கு இடையில் அமைந்துள்ள வடகிழக்கு திசையின் அதிபதி ஈசானன் ஆவார். இத்திசையில், கழிவறை, உபயோகமற்ற பொருள்களை வைக்கும் ஸ்டோர் ரூம் போன்றவற்றை அமைப்பது கூடாது. கிணறு, நிலத்தடி நீரை எடுக்கும் ‘போர்வெல்’, பூஜை அறை மற்றும் படிப்பறை ஆகியவற்றை இப்பகுதியில் அமைப்பது ஐதீகமாக உள்ளது.

Next Story