இந்திய கைப்பந்து சம்மேளனத்தை நிர்வகிக்க தலைவருக்கு அதிகாரம் அசோசியேட் செயலாளர் நந்தகுமார் பேட்டி


இந்திய கைப்பந்து சம்மேளனத்தை நிர்வகிக்க தலைவருக்கு அதிகாரம் அசோசியேட் செயலாளர் நந்தகுமார் பேட்டி
x
தினத்தந்தி 29 Dec 2016 10:15 PM GMT (Updated: 29 Dec 2016 9:23 PM GMT)

இந்திய கைப்பந்து சம்மேளனத்தை தலைவர் அவதேஷ்குமார் நிர்வகிக்க ஐகோர்ட்டு அதிகாரம் வழங்கி இருப்பதாக அசோசியேட் செயலாளர் நந்தகுமார் தெரிவித்தார்.

சென்னை,

இந்திய கைப்பந்து சம்மேளனத்தை தலைவர் அவதேஷ்குமார் நிர்வகிக்க ஐகோர்ட்டு அதிகாரம் வழங்கி இருப்பதாக அசோசியேட் செயலாளர் நந்தகுமார் தெரிவித்தார்.

கைப்பந்து சம்மேளன பிரச்சினை

இந்திய கைப்பந்து சம்மேளனத்தின் அசோசியேட் செயலாளர் நந்தகுமார், துணைத்தலைவர் பெத்தே கவுடா ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

இந்திய கைப்பந்து சம்மேளனத்தை வழிநடத்துவதில் கடந்த 10 மாதங்களாக பிரச்சினை இருந்து வருகிறது. இதையடுத்து இந்த விவகாரம் சமரச தீர்வு மையத்துக்கு சென்றது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு விசாரித்து செயலாளர் ராம்அவ்தார் ஜஹார் தலைமையில் இந்திய கைப்பந்து சம்மேளனம் செயல்படுவதற்கு உத்தரவிட்டார். இந்திய கைப்பந்து சம்மேளன தலைவர் சவுத்ரி அவதேஷ்குமார் இடை நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதைஎதிர்த்து சவுத்ரி அவதேஷ்குமார் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, சமசர தீர்ப்பு மையத்தின் எல்லாவகையான உத்தரவுக்கும் கடந்த 23-ந்தேதி இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. இதன் மூலம் இந்திய கைப்பந்து சம்மேளனத்தின் தலைவராக சவுத்ரி அவதேஷ்குமார் தொடர்ந்து செயல்பட முடியும். கைப்பந்து சம்மேளனத்தின் வங்கி வரவு-செலவுகளை கையாளவும் அவதேஷ்குமாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், தேசிய அளவிலான போட்டிகள் மற்றும் இந்திய வாலிபால் லீக்கை நடத்தும் அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

ஐ.வி.எல். போட்டி நடத்துவோம்

கோர்ட்டின் உத்தரவுப்படி பார்த்தால், தற்போது சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வரும் தேசிய சீனியர் கைப்பந்து போட்டி விதிமுறைக்குட்பட்டதே அல்ல. சொல்லப்போனால் அது செல்லாத ஒரு போட்டி தான். நாங்கள் நினைத்தால் அதை தடுத்து நிறுத்திருக்க முடியும். ஆனால் வீரர், வீராங்கனைகளின் நலன் கருதி அதற்கு எந்த இடையூறும் செய்யவில்லை.

அவதேஷ்குமார் தலைமையில் தேசிய ஜூனியர், சப்-ஜூனியர் மற்றும் பீச் வாலிபால் போட்டிகளை நடத்துவோம். மார்ச் 2-வது வாரத்தில் இந்தியன் வாலிபால் லீக் (ஐ.வி.எல்.) போட்டியை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.

இணைந்து செயல்பட தயார்

எங்களை பொறுத்தவரை சமரச பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். பிரிந்து கிடக்கும் இரு குரூப்பும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.

இது தொடர்பான இன்னொரு வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் வரை சர்வதேச போட்டிக்கு வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்வது மற்றும் பயிற்சியாளரை அனுப்புவது ஆகிய பணிகளை இரு பிரிவினரும் இணைந்தே செய்ய வேண்டும். இந்திய கைப்பந்து சம்மேளனம் பெயரில் இல்லாமல் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பெயரில் அணிகளை அனுப்ப வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டு அறிவுறுத்தி இருக்கிறது. கோர்ட்டு என்ன சொல்கிறதோ அதை பின்பற்றி செயல்படுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பேட்டியின் போது ஆசிய கைப்பந்து சம்மேளனத்தின் மத்திய மண்டல செயலாளர் சுனில், தமிழ்நாடு கைப்பந்து சங்க செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், பீச் வாலிபால் கவுன்சில் சேர்மன் மார்ட்டின் சுதாகர், தெலுங்கானா கைப்பந்து சங்க செயலாளரும், அர்ஜூனா விருது பெற்றவருமான ரவிகாந்த் ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story