57 அணிகள் பங்கேற்கும் தேசிய கூடைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடக்கம்


57 அணிகள் பங்கேற்கும் தேசிய கூடைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 17 Jan 2018 2:30 AM IST (Updated: 17 Jan 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

57 அணிகள் பங்கேற்கும் தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.

சென்னை,

57 அணிகள் பங்கேற்கும் தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.

தேசிய சீனியர் கூடைப்பந்து

தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில், அரைஸ் ஸ்டீல் நிறுவனம் ஆதரவுடன் 68-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (புதன்கிழமை) முதல் 24-ந் தேதி வரை நடக்கிறது.

இதன் ஆண்கள் பிரிவில் 31 அணிகளும், பெண்கள் பிரிவில் 26 அணிகளும் கலந்து கொண்டு மோதுகின்றன. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. லெவல்-1, லெவல்-2 என்ற அடிப்படையில் அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. லெவல்-1 பிரிவில் கடந்த தேசிய போட்டியில் முதல் 10 இடங்களை பிடித்த அணிகள் இடம் பெறும். லெவல்-2 பிரிவில் பின்தங்கிய அணிகள் இடம் பெறும்.

லெவல்-1 பிரிவு

ஆண்கள் பிரிவில் லெவல்-1 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் உத்தரகாண்ட், ராஜஸ்தான், கேரளா, கர்நாடகா, ஒடிசா ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் 2-வது இடம் பெற்ற தமிழ்நாடு, பஞ்சாப், அரியானா, இந்தியன் ரெயில்வே, குஜராத் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன. லெவல்-2 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த பிரிவில் சத்தீஷ்கார், கோவா, சர்வீசஸ், டெல்லி, ஆந்திரா, டெல்லி, அசாம் உள்பட 21 அணிகள் இடம் பெற்றுள்ளன.

பெண்கள் பிரிவில் லெவல்-1 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் கேரளா, சத்தீஷ்கார், தமிழ்நாடு, மத்தியபிரதேசம், கர்நாடகா ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் 2-வது இடம் பெற்ற தெலுங்கானா, இந்தியன் ரெயில்வே, டெல்லி, மராட்டியம், ராஜஸ்தான் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன. லெவல்-2 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த பிரிவில் பஞ்சாப், குஜராத், அரியானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், பீகார் உள்பட 16 அணிகளும் இடம் பெற்றுள்ளன.

7 ஆண்டுகளுக்கு பிறகு...

லீக் ஆட்டங்கள் முடிவில் லெவல்-1-ல் இரண்டு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். இரு பிரிவிலும் 4-வது இடத்தை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் ஆட வேண்டும். லெவல்-2-வில் இருந்து ‘டாப்-2’ அணிகள் கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழையும். இந்த 4 அணிகளுக்கு இடையிலான மோதலில் வெற்றி பெறும் 2 அணிகள் கால் இறுதி வாய்ப்பை பெறும். கால்இறுதியில் இருந்து நாக்-அவுட் முறையில் ஆட்டம் நடைபெறும்.

சென்னையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டி நடைபெறுகிறது. கடைசியாக 2011-ம் ஆண்டு இங்கு இந்த போட்டி நடந்தது. கடந்த ஆண்டு நடந்த தேசிய போட்டியில் தமிழக ஆண்கள் மற்றும் பெண்கள் அணி 2-வது இடம் பிடித்தது. சொந்த மண்ணில் நடைபெறும் இந்த போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செர்பியாவை சேர்ந்த மிலான், அலெக்சாண்டர் ஆகியோர் தலைமை பயிற்சியாளர்களாக இருந்து தமிழக அணிகளுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகிறார்கள்.

தமிழக அணி வீரர்-வீராங்கனைகள்

தேசிய சீனியர் போட்டியில் நாடு முழுவதும் இருந்து முன்னணி வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு ஆடுவதால் இந்த போட்டி சென்னை ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு கூடைப்பந்து சங்க தலைவர் ராஜ் சத்யன், பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். காலை 7 மணி முதல் ஆட்டங்கள் நடைபெறும். போட்டியின் தொடக்க விழா மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

தேசிய சீனியர் போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி வீரர்-வீராங்கனைகள் வருமாறு:-

ஆண்கள் அணி: அகிலன் (கேப்டன்), பிரசன்னா, சிவபாலன், அரவிந்த், ஜீவா, ரிகின், ரகுராம், முனிஸ் பெய்க், ஜஸ்டின், பாலகணேஷ், சாரி, ஹரிஷ், பயிற்சியாளர்கள்: ரவிசங்கர், ஜேம்ஸ்.

பெண்கள் அணி: அழகு தமிழ்மொழி (கேப்டன்), ஸ்ரீவித்யா சேகர், ஸ்ரீவித்யா, நிஷாந்தி, வந்தனா, புஷ்பா, சத்யா, தர்ஷினி, ஷினு, காயத்ரி, மோகனபாலா, அவந்தி, பயிற்சியாளர்கள்: சம்பத், ஆதிரை.

Next Story