தேசிய கூடைப்பந்து போட்டி: தமிழக ஆண்கள் அணி 2-வது வெற்றி


தேசிய கூடைப்பந்து போட்டி: தமிழக ஆண்கள் அணி 2-வது வெற்றி
x
தினத்தந்தி 19 Jan 2018 2:30 AM IST (Updated: 19 Jan 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

தேசிய கூடைப்பந்து போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தமிழக ஆண்கள் அணி 2-வது வெற்றியை சுவைத்தது.

சென்னை,

தேசிய கூடைப்பந்து போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தமிழக ஆண்கள் அணி 2-வது வெற்றியை சுவைத்தது.

தேசிய சீனியர் கூடைப்பந்து

தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில், அரைஸ் ஸ்டீல் நிறுவனம் ஆதரவுடன் 68-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.

24-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 31 அணிகளும், பெண்கள் பிரிவில் 26 அணிகளும் கலந்து கொண்டுள்ளன. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் இந்த போட்டி நடைபெறுகிறது. லெவல்-1, லெவல்-2 என்ற அடிப்படையில் அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. லெவல்-1 பிரிவில் கடந்த தேசிய போட்டியில் முதல் 10 இடங்களை பிடித்த அணிகள் அங்கம் வகிக்கின்றன. லெவல்-2 பிரிவில் பின்தங்கிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

தமிழக ஆண்கள் அணி வெற்றி

ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த ஆட்டங்களில் ராஜஸ்தான் அணி 87-72 என்ற புள்ளி கணக்கில் கேரளாவையும், கர்நாடக அணி 85-83 என்ற நடப்பு சாம்பியன் உத்தரகாண்ட்டையும் தோற்கடித்தது.

இரவில் அரங்கேறிய மற்றொரு ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 102-63 என்ற புள்ளி கணக்கில் குஜராத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது. தமிழக அணி, தனது தொடக்க ஆட்டத்தில் அரியானாவை வென்று இருந்தது.

மற்ற ஆட்டங்களில் சர்வீசஸ் அணி 87-26 என்ற புள்ளி கணக்கில் கோவாவையும், சத்தீஷ்கார் 45-19 என்ற புள்ளி கணக்கில் சிக்கிம் அணியையும், தெலுங்கானா அணி 70-57 என்ற புள்ளி கணக்கில் ஜம்மு-காஷ்மீரையும், மேற்கு வங்காளம் அணி 54-49 என்ற புள்ளி கணக்கில் மராட்டியத்தையும், டெல்லி அணி 68-50 என்ற புள்ளி கணக்கில் ஆந்திராவையும் சாய்த்தன.

இஷாந்த் ஷர்மாவின் மனைவி அபாரம்

பெண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் கர்நாடகா அணி 70-67 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் கேரளாவுக்கு அதிர்ச்சி அளித்தது. மற்றொரு ஆட்டத்தில் டெல்லி அணி 85-43 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கானாவை நொறுக்கியது. டெல்லி அணியில் இடம் பெற்று இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவின் மனைவி பிரதிமா சிங் அதிகபட்சமாக 21 புள்ளிகள் சேர்த்து அசத்தினார்.

இன்னொரு ஆட்டத்தில் தமிழ்நாடு-சத்தீஷ்கார் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஒரு கட்டத்தில் சத்தீஷ்கார் அணி 22 புள்ளிகள் வரை முன்னிலை பெற்றது. கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அணி சரிவில் இருந்து மீண்டு ஆட்ட நேரம் முடிவில் 77-77 என்ற புள்ளி கணக்கில் சமநிலையை எட்டியது. பின்னர் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க வழங்கப்பட்ட கூடுதல் 5 நிமிட நேர ஆட்டத்தில் தமிழக அணி சொதப்பியது. முடிவில் சத்தீஷ்கார் அணி 93-85 என்ற புள்ளி கணக்கில் தமிழக அணியை சாய்த்து ‘திரில்’ வெற்றியை ருசித்தது. சத்தீஷ்கார் அணியில் அதிகபட்சமாக அஞ்சு லாக்ரா 29 புள்ளிகளும், தமிழக அணியில் ஸ்ரீவித்யா 16 புள்ளிகளும் எடுத்தனர்.

Next Story