தேசிய கூடைப்பந்து போட்டி தமிழக ஆண்கள் அணி அரைஇறுதிக்கு தகுதி


தேசிய கூடைப்பந்து போட்டி தமிழக ஆண்கள் அணி அரைஇறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 22 Jan 2018 10:15 PM GMT (Updated: 22 Jan 2018 7:32 PM GMT)

தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டியில் தமிழக ஆண்கள் அணி அரை இறுதிக்கு முன்னேறியது. #National #sports

சென்னை,

தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில், அரைஸ் ஸ்டீல் நிறுவனம் ஆதரவுடன் 68-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதன் லீக் ஆட்டங்கள் முடிவில் ஆண்கள் பிரிவில் கர்நாடகா, உத்தரகாண்ட், ராஜஸ்தான் (ஏ பிரிவு), தமிழ்நாடு, இந்தியன் ரெயில்வே, பஞ்சாப் (பி பிரிவு), சண்டிகார், சர்வீசஸ் ஆகிய அணிகளும், பெண்கள் பிரிவில் கர்நாடகா, கேரளா, சத்தீஷ்கார், தமிழ்நாடு (ஏ பிரிவு), இந்தியன் ரெயில்வே, மராட்டியம், டெல்லி (பி பிரிவு), உத்தரபிரதேசம் ஆகிய அணிகளும் கால்இறுதிக்கு தகுதி பெற்றன. நாக்-அவுட் சுற்றான கால்இறுதி ஆட்டங்கள் நேற்று அரங்கேறியது.

நேற்று நடந்த பெண்கள் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் கேரளா அணி 64-42 என்ற புள்ளி கணக்கில் டெல்லியை சாய்த்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. கேரள அணியில் ஜீனா 21 புள்ளியும், டெல்லி அணியில் ராஸ்பிரீத்சிங் 24 புள்ளியும் குவித்தனர்.

மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் மராட்டியம்-சத்தீஷ்கார் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சத்தீஷ்கார் அணி 90-61 என்ற புள்ளி கணக்கில் மராட்டியத்தை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது. சத்தீஷ்கார் அணி கேப்டன் அஞ்சும் லக்ரா 26 புள்ளியும், மராட்டிய வீராங்கனை காரினா மெனிசெஸ் 18 புள்ளியும் எடுத்தனர்.

இன்னொரு கால்இறுதி ஆட்டத்தில் கர்நாடக அணி 78-63 என்ற புள்ளி கணக்கில் உத்தரபிரதேச அணியை விரட்டியடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. கர்நாடக அணியின் பிரியங்கா 22 புள்ளியும், உத்தரபிரதேச அணியில் வைஷ்ணவி 35 புள்ளியும் குவித்தனர். மற்றொரு கால்இறுதியில் தமிழக அணி 64-96 என்ற புள்ளி கணக்கில் இந்தியன் ரெயில்வே அணியிடம் தோல்வி கண்டு வெளியேறியது.

ஆண்கள் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான உத்தரகாண்ட் அணி 68-70 என்ற புள்ளி கணக்கில் பஞ்சாபிடம் வீழ்ந்தது. மற்றொரு கால்இறுதியில் இந்தியன் ரெயில்வே அணி 103-79 என்ற புள்ளி கணக்கில் ராஜஸ்தானை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது. இன்னொரு கால்இறுதியில் சர்வீசஸ் அணி 90-70 என்ற புள்ளி கணக்கில் கர்நாடகாவை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.

மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 97-43 என்ற புள்ளி கணக்கில் சண்டிகாரை எளிதில் தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. அரைஇறுதியில் இன்று தமிழக அணி, பஞ்சாபை (இரவு 7.30 மணி) சந்திக்கிறது.

Next Story