தேசிய கூடைப்பந்து போட்டி: தமிழ்நாடு, ரெயில்வே அணிகள் ‘சாம்பியன்’


தேசிய கூடைப்பந்து போட்டி: தமிழ்நாடு, ரெயில்வே அணிகள் ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 24 Jan 2018 9:15 PM GMT (Updated: 24 Jan 2018 7:49 PM GMT)

68-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. #sports #Tamilnews

சென்னை,

68-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் 8-வது மற்றும் கடைசி நாளான நேற்று நடந்த பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியன் ரெயில்வே அணி 100-71 என்ற புள்ளி கணக்கில் சத்தீஷ்கார் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

ரெயில்வே அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவது இது 28-வது முறையாகும். கேரளா அணி, கர்நாடகாவை சாய்த்து 3-வது இடம் பிடித்தது. தமிழக அணிக்கு 5-வது இடம் கிடைத்தது.

ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு-சர்வீசஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தமிழக அணி 94-86 என்ற புள்ளி கணக்கில் சர்வீசஸ் அணியை வீழ்த்தி 10-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தமிழக அணியில் ரிகின் பெதானி 25 புள்ளிகள் சேர்த்தார். இந்தியன் ரெயில்வே அணி, பஞ்சாபை வீழ்த்தி 3-வது இடத்தை பிடித்தது. பெண்கள் அணியினருக்கான பரிசளிப்பு விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியின் வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் பரிசு கோப்பையை வழங்கினார். சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு ரூ.2 லட்சமும், 2-வது இடம் பெற்ற அணிக்கு ரூ.1 லட்சமும், 3-வது இடம் பெற்ற அணிக்கு ரூ.50 ஆயிரமும் ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டது. ரெயில்வே அணியில் இடம் பிடித்து ஆடிய தமிழக முன்னணி வீராங்கனை அனிதா பால்துரைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுடன் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவில் அமைச்சர்கள் பலகிருஷ்ணா ரெட்டி, ஜெயக்குமார், விஜயபாஸ்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவர் கோவிந்தராஜ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ்நாடு கூடைப்பந்து சங்க தலைவர் ராஜ்சத்யன், பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story