86 அணிகள் பங்கேற்கும் மாநில கூடைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடக்கம்
14–வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னை தியாகராயநகர் வெங்கட்நாராயணா ரோட்டில் உள்ள மாநகராட்சி திடலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 9–ந் தேதி வரை நடக்கிறது.
சென்னை,
ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் அரைஸ் ஸ்டீல், சத்யம் சினிமாஸ் ஆதரவுடன் 14–வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னை தியாகராயநகர் வெங்கட்நாராயணா ரோட்டில் உள்ள மாநகராட்சி திடலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 9–ந் தேதி வரை நடக்கிறது. இதன் ஆண்கள் பிரிவில் சுங்க இலாகா, இந்தியன் வங்கி, தமிழ்நாடு சிறப்பு போலீஸ் உள்பட 66 அணிகளும், பெண்கள் பிரிவில் ரைசிங் ஸ்டார், இந்துஸ்தான் பல்கலைக்கழகம் உள்பட 20 அணிகளும் கலந்து கொள்கின்றன. முதல் 5 நாட்கள் போட்டி தினசரி காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். அதன் பிறகு மாலையில் தொடங்கி போட்டி நடைபெறும். இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.30 ஆயிரமும், 2–வது இடம் பெறும் அணிக்கு ரூ.20 ஆயிரமும், பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.25 ஆயிரமும், 2–வது இடம் பெறும் அணிக்கு ரூ.15 ஆயிரமும் ரொக்கப்பரிசாக வழங்கப்படும். இந்த தகவலை ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் செயலாளர் என்.சம்பத் தெரிவித்துள்ளார்.