போராடி வென்ற ‘பத்மஸ்ரீ’ மங்கை


போராடி வென்ற ‘பத்மஸ்ரீ’ மங்கை
x
தினத்தந்தி 6 Feb 2021 1:25 PM GMT (Updated: 6 Feb 2021 1:25 PM GMT)

சென்னையை பூர்வீகமாகக் கொண்ட அனிதா பால்துரை, ‘பத்மஸ்ரீ' என்ற கவுரவத்தை தன் பெயருக்கு முன்னால் சேர்க்க ரொம்பவே போராடி இருக்கிறார். அந்த போராட்ட கதையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

பத்மஸ்ரீ விருதை போராடி வென்ற கதையை கூறுங்கள்?

நான் பத்மஸ்ரீ விருது வென்றது பலருக்கு சாதாரண செய்தியாக தெரியலாம். ஆனால் அதற்குள் 7 வருட போராட்டம் ஒளிந்திருக்கிறது. கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு மேலாக கூடைப்பந்து விளையாடி வருகிறேன். அதன் அடிப்படையில், 2013-ம் ஆண்டு அர்ஜூனா விருதிற்கு விண்ணப்பித்திருந்தேன். முதல் முயற்சியிலேயே விருது கிடைத்துவிடும் என்றுதான் நம்பிக்கையாக இருந்தேன். ஆனால் காலம் வேறுவிதமான கணக்கை போட்டது. பல காரணங்களால், அர்ஜூனா விருது பெறும் கனவும், ஆசையும் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு தள்ளிப்போடப்பட்டன. 2013-ம் ஆண்டில் தொடங்கி, அடுத்த 6 ஆண்டுகள் விடாமுயற்சியுடன் அர்ஜூனா விருதிற்கு முயற்சித்தேன். ஆனால் இறுதிவரை அர்ஜூனா விருது கனவாகவே இருந்துவிட்டது.

அர்ஜூனா விருது, பத்மஸ்ரீ விருதாக மாறியது எப்படி?

7 ஆண்டுகளாக நான் அர்ஜூனா விருது பெற முயற்சிப்பதை கேள்விப்பட்டு சில நல் உள்ளங்கள், அர்ஜூனா விருதுடன் பத்மஸ்ரீ விருதிற்கும் விண்ணப்பிக்க அறிவுறுத்தினர். அதன்படி, பத்மஸ்ரீ விருதிற்கு கடந்த 3 ஆண்டுகளாக விண்ணப்பித்தேன். அந்த வகையில்தான் இப்போது பத்மஸ்ரீ கிடைத்திருக்கிறது.

அர்ஜூனா விருது தள்ளிப்போடப்பட்டது ஏன்?

மல்யுத்தம், குத்துச்சண்டை போன்ற தனிநபர் விளையாட்டில் சாதிப்பவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் கூடைப்பந்து, கால்பந்து போன்ற குழு விளையாட்டில் சாதிப்பவர்களுக்கு கிடைப்பதில்லை. அதனால்தான், பெரும் போராட்டத்திற்கு பிறகு விருது பெற வேண்டியதாகிவிட்டது.

விருது பெறும் முயற்சியில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்திருக்கிறீர்கள். இருப்பினும் சாதித்துக்காட்டியது எப்படி?

‘முயற்சி செய். உனக்கு மத்திய அரசின் விருது நிச்சயம் கிடைக்கும்' என்ற என் அப்பாவின் வார்த்தைகள்தான் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தின. ஒவ்வொருமுறை விருது பட்டியல் அறிவிக்கப்படும்போதும், அவர் ஆவலாய் இருப்பார். அதில் என் பெயர் இடம்பெறவில்லை என்றாலும், அந்த ஏமாற்றத்தை என் னிடம் வெளிக்காட்டாமல், அடுத்த முயற்சிக்கு ஊக்கமளிப்பார். அவர் எங்களுடன் இருந்தபோது, விருது கவுரவம் தவறி கொண்டே இருந்தது. ஆனால் ‘பத்மஸ்ரீ' விருது கவுரவம் பெறுகையில், அவர் தவறிவிட்டார்.

கூடைப்பந்து விளையாட்டில் உங்களது பலம் என்ன?

மொத்த அணியையும் ஒருங்கிணைத்து, கோல் போடுவதைதான் என் பலமாக கருதுகிறேன். அதேபோல 18 வருடங்களுக்கும் மேலாக கூடைப்பந்து விளையாடுவதால், அணியினரின் எண்ண ஓட்டங்களை அவர்களது உடல் மொழியிலும், கண் அசைவிலும் புரிந்து கொண்டு, அதன்படி செயல்பட முடிகிறது. இதன் காரணமாகவே, பல சாம்பியன்ஷிப் போட்டிகளை வென்று வந்திருக்கிறோம்.

கூடைப்பந்தாட்ட வீராங்கனையாகவும், பொறுப்பான குடும்பத் தலைவியாகவும் உங்களது அடுத்தக்கட்ட இலக்குகள் என்ன?

நிறைய விளையாடிவிட்டேன். இருப்பினும் கூடைப்பந்தாட்ட ஆசை குறையவில்லை. பயிற்சியாளராக, விளையாட்டின் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல தயாராக இருக்கிறேன். பல இளம் வீரர்-வீராங்கனைகளுக்கு கூடைப்பந்தாட்ட நுணுக்கங்களை கற்றுக்கொடுக்க ஆவலாய் இருக்கிறேன். இதுவரை விளையாட்டு போட்டிகள், வேலை... என பிசியாக இருந்துவிட்டேன். இனி அன்பான அம்மாவாகவும், பொறுப்பான குடும்பத் தலைவியாகவும் குடும்பத்தினருடன் நேரம் செலவிட ஆசையாய் இருக்கிறேன்.

சிறுமியாக, இளம் பெண்ணாக, குழந்தைகளுக்கு அம்மாவாக... பல கால கட்டங்களில் கூடைப்பந்து விளையாடி இருக்கிறீர்கள். உங்களது விளையாட்டில் வித்தியாசத்தை உணர்ந்தது உண்டா?

விளையாட்டின் வேகம் என்றுமே குறைந்தது இல்லை. சிறுமியாக விளையாட தொடங்கியதில் இருந்து, அம்மாவாக விளையாடும் இன்று வரை அதே வேகத்தோடும், அதே போராட்ட குணத்தோடும்தான் விளையாடுகிறேன். வயது, உடல் எடை, குடும்ப பொறுப்புகள்... என எதுவும் என் விளையாட்டு திறனை குறைத்துவிடவில்லை.

யார் இந்த அனிதா..?

2001-ம் ஆண்டு இந்திய கூடைப்பந்தாட்ட அணியில் நுழைந்தார். அபாரமான ஆட்டத்திறனால், வெகு விரைவிலேயே தவிர்க்கமுடியாத வீராங்கனையாக மாறினார். அதன் காரணமாக 19 வயதிலேயே தேசிய அணியை வழிநடத்தும் வாய்ப்பு அனிதாவிற்கு கிடைத்தது. ஆசிய சாம்பியன்ஷிப், காமன்வெல்த் போட்டிகள் (2006), ஆசிய விளையாட்டுகள் (2010) போன்ற மிக முக்கிய போட்டிகளில் தலைமையேற்று, பல வெற்றிகளை தேடி கொடுத்தார். தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப்பில் 30 பதக்கங்கள் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார். 2013-ம் ஆண்டு, உலகின் மிகச்சிறந்த பத்து வீராங்கனைகளில் ஒருவராக தேர்வாகி அசத்தினார்.

வியட்நாமில் நடந்த (2009) ஆசிய உள்விளையாட்டு போட்டியில் வெள்ளி பதக்கம், இலங்கையில் நடந்த சவுத் ஏசியா பீச் கேம்ஸ் (2011) போட்டியில் தங்கப் பதக்கம் வென்று கொடுத்தார். தோஹாவில் நடந்த ஏசியன் பாஸ்கட்பால் சாம்பியன்ஷிப் (2013) போட்டியிலும், சீனாவில் நடந்த ஏசியன் பீச் கேம்ஸ் (2012) போட்டியிலும் தங்கம் வென்று கொடுத்தார். திருமணம், குழந்தை பிறப்பு காரணங்களுக்காக இரண்டு ஆண்டுகள் விளையாட்டில் இருந்து விலகி இருந்தவர், 2017-ம் ஆண்டு மீண்டும் தேசிய அணியில் இடம் பிடித்தார். அதோடு இளம் அணியினருக்கு தேசிய பயிற்சியாளராகவும் செயல்பட்டார். அனிதா வின் கணவர் பெயர் கார்த்திக் பிரபாகரன். இந்த தம்பதிக்கு வர்ஷன், லக்ஷனா என்ற இரு குழந்தைகள் இருக்கிறார்கள்.

Next Story