தென் மண்டல கூடைப்பந்து சாம்பியன்ஷிப்: தமிழக அணிகள் அபாரம்


தென் மண்டல கூடைப்பந்து சாம்பியன்ஷிப்: தமிழக அணிகள் அபாரம்
x
தினத்தந்தி 15 Dec 2021 11:27 PM GMT (Updated: 15 Dec 2021 11:27 PM GMT)

இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழக அணி 88-60 என்ற புள்ளி கணக்கில் கர்நாடகாவை சாய்த்தது.

சென்னை, 

தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில், 71-வது தென் மண்டல கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழக அணி 88-60 என்ற புள்ளி கணக்கில் கர்நாடகாவை சாய்த்தது. தமிழகம் தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். 

தமிழக அணியில் ஐஸ்வர்யா 21 புள்ளியும், நிஷாந்தி, தர்ஷினி தலா 18 புள்ளியும் சேர்த்தனர். இன்னொரு லீக் ஆட்டத்தில் தெலுங்கானா அணி 77-70 என்ற புள்ளி கணக்கில் கேரளாவுக்கு அதிர்ச்சி அளித்து 2-வது வெற்றியை சொந்தமாக்கியது. 2-வது ஆட்டத்தில் ஆடிய கேரளா முதல் தோல்வியை சந்தித்தது.

ஆண்கள் பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் தமிழக அணி 88-60 என்ற புள்ளி கணக்கில் கர்நாடகாவை தோற்கடித்து தொடர்ச்சியாக 3-வது (ஹாட்ரிக்) வெற்றியை சுவைத்தது. தமிழக அணியில் முய்ன் பெக் 22 புள்ளியும், அரவிந்த் 16 புள்ளியும் குவித்தனர். முன்னதாக நடந்த ஆட்டம் ஒன்றில் தெலுங்கானா அணி 122-95 என்ற புள்ளி கணக்கில் ஆந்திராவை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் கேரளா அணி 68-26 என்ற புள்ளி கணக்கில் புதுச்சேரியை துவம்சம் செய்து 2-வது வெற்றியை தனதாக்கியது.

Next Story