11-வது உலகக் கோப்பை கிரிக்கெட்: 5-வது முறையாக சிகரம் தொட்ட ஆஸ்திரேலியா


11-வது உலகக் கோப்பை கிரிக்கெட்: 5-வது முறையாக சிகரம் தொட்ட ஆஸ்திரேலியா
x

டோனி தலைமையில் படையெடுத்த நடப்பு சாம்பியனாக இருந்த இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்று இருந்தது.


11-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்தின. 2015-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி முதல் மார்ச் 29-ந் தேதி வரை மொத்தம் 14 நகரங்களில் இந்த போட்டி நடத்தப்பட்டது. இவ்விரு நாடுகளும் உலகக் கோப்பை போட்டியை கூட்டாக நடத்தியது இது 2-வது முறையாகும்.

இதில் பங்கேற்ற 14 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் லீக் சுற்றில் மோதின. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் கால்இறுதிக்குள் நுழைந்தன.

டோனி தலைமையில் படையெடுத்த நடப்பு சாம்பியனான இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பெற்று இருந்தது. அந்த பிரிவில் இடம் பெற்ற பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ் உள்ளிட்ட 6 அணிகளையும் துவம்சம் செய்து கம்பீரமாக கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. இதே போல் 'ஏ' பிரிவில் நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 6 அணிகளையும் பதம் பார்த்து கால்இறுதிக்கு முன்னேறியது. லீக் சுற்றில் வங்காளதேசத்திடம் அதிர்ச்சிகரமாக தோற்ற இங்கிலாந்து அணி அந்த சுற்றை தாண்டவில்லை.



கால்இறுதியில் தென்ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி நாக்-அவுட் சுற்றில் முதல்முறையாக வெற்றியை தனதாக்கியது. ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், நியூசிலாந்து 143 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசையும் வெளியேற்றின. மற்றொரு கால்இறுதியில் இந்திய அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வதம் செய்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் ரோகித் சர்மா 90 ரன்னில் இருந்த போது வேகப்பந்து வீச்சாளர் ருபெல் ஹூசைன் வீசிய 'புல்டாஸ்' பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். அதனை நடுவர் 'நோ-பால்' என்று அறிவித்ததால் தொடர்ந்து ஆடிய ரோகித் சர்மா 137 ரன்கள் குவித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். நடுவரின் தவறான முடிவால் தங்கள் அணி தோற்றதாக வங்காளதேச வீரர்கள் மட்டுமின்றி அந்த நாட்டு பிரதமரும் தெரிவித்த கருத்து சர்ச்சையானது.

இதனையடுத்து சிட்னியில் நடந்த அரைஇறுதியில் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது. ஸ்டீவன் சுமித் (105 ரன்) சதத்தின் உதவியுடன் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 329 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 46.5 ஓவர்களில் 233 ரன்னில் அடங்கியது. விராட்கோலி (1 ரன்), சுரேஷ் ரெய்னா (7 ரன்) சோபிக்காதது அணிக்கு பாதகமானது. மற்றொரு அரைஇறுதியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை ஓடவிட்டு முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டியது.

மெல்போர்னில் 93 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் அரங்கேறிய இறுதிப்போட்டியில் போட்டியை நடத்திய ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 45 ஓவர்களில் 183 ரன்னில் முடங்கியது. கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் ரன் எதுவுமின்றி ஆட்டம் இழந்தார். இதன் மூலம் அவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் 'டக்-அவுட்' ஆன முதல் கேப்டன் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். பின்னர் ஆடிய மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலியா 33.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று மகுடத்தை தனதாக்கியது. 5-வது முறையாக உலகக் கோப்பையை முத்தமிட்ட ஆஸ்திரேலியா மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது. வேறு எந்த அணியும் 2 முறைக்கு மேல் உலகக் கோப்பையை வென்றதில்லை. இந்த போட்டியுடன் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.




மொத்தம் 49 ஆட்டங்கள் கொண்ட இந்த உலகக் கோப்பை போட்டியில் ரன் மழை பொழியப்பட்டது. 28 முறை 300 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டன. இதில் 3 ஆட்டங்களில் 400 ரன்களுக்கு மேல் ஸ்கோர் எகிறியதும் அடங்கும். இது வேறு எந்த உலகக் கோப்பையிலும் நடந்திராத சாதனையாகும். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுக்கு 417 ரன்கள் குவித்து உலக கோப்பை போட்டியில் அதிக ரன் குவித்த அணி என்ற சாதனையை படைத்தது.

அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்திலும் (547 ரன்கள்), அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், நியூசிலாந்தின் டிரென்ட் பவுல்ட் (தலா 22 விக்கெட்) ஆகியோரும் முதலிடத்தை பிடித்தனர்.

முதல்முறையாக இரட்டை சதம்

இந்த உலகக் கோப்பையில் முதல்முறையாக இரட்டை சதம் அடிக்கப்பட்டது. அதுவும் இரண்டு முறை இரட்டை சதம் தரிசனம் ரசிகர்களுக்கு வாய்த்தது. ஜிம்பாப்வேக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 215 ரன்கள் (10 பவுண்டரி, 16 சிக்சர்) குவித்தார். இதன் மூலம் உலகக் கோப்பையில் இரட்டை செஞ்சுரியை அடித்த முதல் வீரர் என்ற வரலாறு படைத்தார். இந்த ஆட்டத்தில் அவரும், சாமுவேல்சும் (133 நாட்-அவுட்) இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 372 ரன்கள் குவித்து மலைக்க வைத்தனர். ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன் இதுவாகும்.



இதேபோல் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கால்இறுதியில் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் ஆட்டம் இழக்காமல் 237 ரன்கள் (24 பவுண்டரி, 11 சிக்சர்) நொறுக்கி வியக்க வைத்தார். உலகக் கோப்பை போட்டி தொடரில் ஒரு வீரரின் தனிநபர் அதிகபட்சம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக 4 சதம் விளாசி சங்கக்கரா சாதனை



இந்த உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் சங்கக்கரா புதிய சரித்திரம் படைத்தார். அவர் வங்காளதேசம் (105 ரன், நாட்-அவுட்), இங்கிலாந்து (117 ரன், நாட்-அவுட்), ஆஸ்திரேலியா (104 ரன்), ஸ்காட்லாந்து (124 ரன்) ஆகிய அணிகளுக்கு எதிராக வரிசையாக சதம் அடித்து அசத்தினார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் சதம் அடித்த முதல் வீரர், உலகக் கோப்பை தொடர் ஒன்றில் தொடர்ந்து 4 சதம் விளாசிய முதல் வீரர் என்ற அரிய சாதனைகளுடன் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 38 சதங்கள் விளாசப்பட்டன. இதற்கு முன்பு இவ்வளவு சதங்கள் எந்தவொரு உலகக் கோப்பையிலும் வந்தது கிடையாது.


Next Story