முதல் ஒருநாள் போட்டி: அயர்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி - எபாடட் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தல்...!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி அங்கு 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
சில்கெட்,
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி அங்கு 1 டெஸ்ர், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்காளதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் குவித்தது.
வங்கதேச அணி தரப்பில் ஷகிப் 93 ரன்களும், டவ்ஹித் ஹ்ரிடோய் 92 ரன்களும் எடுத்தனர். அயர்லாந்து தரப்பில் ஹூயும் 4 விக்கெட்டும், மார்க் அடெய்ர், ஆண்டி மெக்பிரைன், கர்டிஸ் காம்ப்பெர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் அயர்லாந்து களம் இறங்கியது.
ஆனால் வங்கதேச அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் அந்த அணி 30.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. எபடாட் ஹோசை 4 விக்கெட்டும், நசும் அகமது 3 விக்கெட்டும், டஸ்கின் அகமது 2 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனால் வங்கதேச அணி 183 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் வங்கதேச அணி முன்னிலையில் உள்ளது.