இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் 3 பேருக்கு கொரோனா


இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் 3 பேருக்கு கொரோனா
x

கோப்புப்படம்

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹோவ்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 2-ந் தேதி தொடங்குகிறது.

டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் பொருட்டு நியூசிலாந்து அணி 2 பயிற்சி ஆட்டங்களில் ஆடுகிறது. இதில் நியூசிலாந்து-கவுண்டி அணியான சஸ்செக்ஸ் இடையிலான 4 நாள் பயிற்சி ஆட்டம் ஹோவ் நகரில் நேற்று தொடங்க இருந்தது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் நடைபெறவில்லை.

இந்த நிலையில் நியூசிலாந்து அணியினருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அந்த அணியின் பேட்ஸ்மேன் ஹென்றி நிகோல்ஸ், வேகப்பந்து வீச்சாளர் பிளேர் டிக்னெர் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் ஷேன் ஜூர்ஜென்சென் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் 3 பேரும் ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அணியில் மற்ற யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை என்றும் பயிற்சி ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


Next Story