20 ஓவர் கிரிக்கெட்: எஸ்.ஆர்.எம். அணி 'சாம்பியன்'
ஆர்.எம்.கே.என்ஜினீயரிங் கல்லூரி சார்பில் மஞ்சுளா முனிரத்தினம் நினைவு 12-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அந்த கல்லூரி மைதானத்தில் நடந்தது.
சென்னை,
ஆர்.எம்.கே.என்ஜினீயரிங் கல்லூரி சார்பில் மஞ்சுளா முனிரத்தினம் நினைவு 12-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள அந்த கல்லூரி மைதானத்தில் நடந்தது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி 22 ரன் வித்தியாசத்தில் லயோலா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இதில் முதலில் ஆடிய எஸ்.ஆர்.எம். அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து ஆடிய லயோலா அணி 18.2 ஓவரில் 125 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் எஸ்.எஸ்.என். என்ஜினீயரிங் கல்லூரி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்.எம்.கே. அணியை தோற்கடித்தது.
எஸ்.ஆர்.எம் அணி வீரர்கள் விக்னேஷ் அய்யர் தொடர்நாயகன் விருதையும், தருண் சிறந்த பந்து வீச்சாளர் விருதையும், லயோலா வீரர் பிரதீப் சிறந்த பேட்ஸ்மேன் விருதையும் பெற்றனர்.