சிவில் என்ஜினீயர்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: 17-ந் தேதி தொடக்கம்


சிவில் என்ஜினீயர்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: 17-ந் தேதி தொடக்கம்
x

இந்த போட்டிக்கான கோப்பை மற்றும் சிறப்பு சீருடை அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.

சென்னை,

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் சிவில் என்ஜினீயர்களுக்கான இந்தியா சிமெண்ட்ஸ் புரோ லீக் (ஐ.சி.பி.எல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி முதல்முறையாக நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் 48 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 6 அணிகள் இடம் பெறும். லீக் சுற்று ஆட்டம் 17-ந் தேதி முதல் ஜனவரி 8-ந் தேதி வரை கோவை, சேலம், திருச்சி, மதுரை, வேலூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடக்கிறது. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

கால்இறுதி, அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டி சென்னையில் ஜனவரி 28, 29 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இறுதிப்போட்டி மின்னொளியில் நடைபெறும். டென்னிஸ் பால் போட்டியான இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசு கோப்பை வழங்கப்படும். ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறந்த வீரர் விருது கொடுக்கப்படும். அத்துடன் தொடரின் சிறந்த பவுலர், பேட்ஸ்மேன், விருதுகளும் வழங்கப்படும்.

இந்த போட்டிக்கான கோப்பை மற்றும் சிறப்பு சீருடை அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் டி.நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோப்பை மற்றும் சீருடையை அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியில் இந்தியா சிமெண்ட்ஸ் செயல் தலைவர் ஆர். சீனிவாசன் (நிதி மற்றும் கணக்கு), தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி பார்த்தசாரதி ராமானுஜம், விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் தமிழ்நாடு பிரிவு தலைவர் எஸ்.நடேஷ், மார்க்கெட்டிங் தலைவர் ஷசாங் சிங், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சிவில் என்ஜினீயர்கள் சங்க தலைவர் எம்.ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story