பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை ஊதித்தள்ளியது இந்தியா


பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை ஊதித்தள்ளியது இந்தியா
x
தினத்தந்தி 2 July 2017 11:00 PM GMT (Updated: 2 July 2017 7:52 PM GMT)

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை ஊதித்தள்ளிய இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் ‘மெகா’ வெற்றி பெற்று அசத்தியது.

டெர்பி,

11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

இந்த நிலையில் டெர்பியில் நேற்று நடந்த 11-வது லீக்கில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானுடன் மோதியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த இந்தியா முதலில் பேட்டிங்கை தொடங்கியது. மந்தமான இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு தாறுமாறாக எடுபட்டதால் இந்திய வீராங்கனைகள் அதிரடி காட்ட முடியாமல் தவித்தனர்.

முந்தைய ஆட்டத்தின் கதாநாயகி மந்தனா 2 ரன்னிலும், கேப்டன் மிதாலி ராஜ் 8 ரன்னிலும் நடையை கட்டினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 169 ரன்களே எடுக்க முடிந்தது.

அதிகபட்சமாக பூனம் ரவுத் 47 ரன்களும் (72 பந்து, 5 பவுண்டரி), விக்கெட் கீப்பர் சுஷ்மா வர்மா 33 ரன்களும் (35 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), தீப்தி ஷர்மா 28 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் நஷ்ரா சந்து 4 விக்கெட்டுகளும், சாடியா யூசுப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

எளிய இலக்கை நோக்கி களம் புகுந்த பாகிஸ்தானுக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சுடச்சுட பதிலடி கொடுத்து திணறடித்தனர். 2-வது ஓவரில் இருந்து பாகிஸ்தானுக்கு விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. ஊசலாடிய அந்த அணியை யாராலும் தூக்கி நிறுத்த இயலவில்லை.

முடிவில் பாகிஸ்தான் அணி 38.1 ஓவர்களில் 74 ரன்களில் முடங்கிப்போனது. இதன் மூலம் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நஹிதா கான் (23 ரன்), கேப்டன் சனா மிர் (29 ரன்) தவிர மற்ற அனைவரும் அந்த அணியில் ஒற்றை இலக்கில் அடங்கினர். இதில் 4 பேர் டக்-அவுட் ஆனதும் உண்டு.

பாகிஸ்தானின் பேட்டிங் முதுகெலும்பை உடைத்த இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் எக்கா பிஷ்ட் 10 ஓவர்களில் 2 மெய்டனுடன் 18 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்து அமர்க்களப்படுத்தினார். அவரே ஆட்டநாயகியாகவும் அறிவிக்கப்பட்டார். பெண்கள் ஒரு நாள் போட்டி வரலாற்றில் இந்திய அணி பாகிஸ்தானிடம் ஒரு போதும் தோற்றதில்லை. அந்த பெருமையை தக்க வைத்துக் கொண்டது.

முதல் இரு ஆட்டங்களில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீசை தோற்கடித்த இந்தியாவுக்கு இது ‘ஹாட்ரிக்’ வெற்றியாக அமைந்தது. பாகிஸ்தானுக்கு இது 3-வது தோல்வியாகும். இந்திய அணி அடுத்து இலங்கையுடன் நாளை மறுதினம் மோதுகிறது.

டவுன்டானில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை பதம் பார்த்தது. இதில் இலங்கை நிர்ணயித்த 205 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணி சாரா டெய்லர் (74 ரன்), கேப்டன் ஹீதர் நைட் (82 ரன்) ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் 30.2 ஓவர்களில் எட்டிப்பிடித்தது.

இன்னொரு ஆட்டத்தில் நியூசிலாந்து நிர்ணயித்த 220 ரன்கள் இலக்கை நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி 8 பந்துகள் மீதம் இருந்த நிலையில் அடைந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

Next Story