வெஸ்ட் இண்டீஸ்– இந்திய லெவன் பயிற்சி ஆட்டம் ‘டிரா’ சுனில் அம்ரிஸ் சதம் அடித்தார்
வெஸ்ட் இண்டீஸ் – இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிகள் இடையிலான 2 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி வதோதராவில் நேற்று முன்தினம் தொடங்கியது.
வதோதரா,
வெஸ்ட் இண்டீஸ் – இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிகள் இடையிலான 2 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி வதோதராவில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணி 6 விக்கெட்டுக்கு 360 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. 2–வது நாளான நேற்று பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 89 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 366 ரன்கள் சேர்த்து 6 ரன் முன்னிலையுடன் டிக்ளேர் செய்தது. அத்துடன் இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி காட்டிய இளம் வீரர் சுனில் அம்ரிஸ் 114 ரன்கள் (98 பந்து, 17 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி அவுட் ஆகாமல் இருந்தார். கிரேக் பிராத்வெய்ட் (52 ரன்), விக்கெட் கீப்பர் ஷேன் டாவ்ரிச் (65 ரன்) அரைசதம் அடித்தனர். இந்திய லெவன் தரப்பில் அவேஷ்கான் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
அடுத்து இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 4–ந்தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது.