ராணுவ தொப்பியை அணிந்து ஆடிய இந்திய அணி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வற்புறுத்தல்


ராணுவ தொப்பியை அணிந்து ஆடிய இந்திய அணி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வற்புறுத்தல்
x
தினத்தந்தி 11 March 2019 11:30 PM GMT (Updated: 11 March 2019 10:33 PM GMT)

ராணுவ தொப்பியை அணிந்து விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வற்புறுத்தி இருக்கிறது.

கராச்சி,

பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் புல்வாமா மாவட்டத்தில் நடத்திய கொடூரமான தாக்குதலில் இந்திய துணை ராணுவ படையினர் 40 பேர் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராஞ்சியில் கடந்த 8-ந் தேதி நடந்த 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நமது ராணுவத்துக்குரிய தொப்பியை அணிந்து விளையாடினர். அத்துடன் இந்த போட்டியின் மூலம் கிடைக்கும் தங்களது போட்டி கட்டணத்தை ராணுவ வீரர்களின் குடும்ப நலநிதிக்கு வழங்குவதாகவும் அறிவித்தனர்.

ராஞ்சி போட்டியில் இந்திய அணி வீரர்கள் ராணுவ வீரர்களுக்குரிய தொப்பியை அணிந்து ஆடியதற்கு பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெமூத் குரேஷி, தகவல்துறை மந்திரி பவாத் சவுத்ரி ஆகியோர் இந்திய கிரிக்கெட் அணியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.சி.சி.க்கு வேண்டுகோள் விடுத்ததுடன், இந்த கோரிக்கையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எழுப்ப வேண்டும் என்றும் தெரிவித்தனர். வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அவர்களுக்கு நிதி திரட்டவும் ராணுவ தொப்பியை அணிந்து விளையாட ஐ.சி.சி.யின் அனுமதியை பெற்று தான் இந்த சம்பவம் அரங்கேறியதாக இந்திய கிரிக்கெட் அணி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஐ.சி.சி.யை வற்புறுத்தி இருக்கிறது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் இஷான் மணி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய விவகாரத்தை நாங்கள் ஐ.சி.சி.யிடம் வலுவாக வாதிடுவோம். இந்த விஷயத்தில் இந்திய அணி மீது ஐ.சி.சி. கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் நிலைப்பாடு குறித்து ஐ.சி.சி.க்கு எந்தவித தவறான புரிதலும் இல்லை. விளையாட்டு மற்றும் கிரிக்கெட்டை அரசியலுடன் கலக்கக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இந்த விவகாரத்தால் கிரிக்கெட் உலகில் இந்தியாவின் மதிப்பு சரிந்து இருக்கிறது.

பாலஸ்தீனத்தில் நடந்த தாக்குதலை கண்டித்து 2014-ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடிய இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேபோல் பாகிஸ்தானை சேர்ந்த மதபோதகருக்கு ஆதரவு தெரிவித்து 2017-ம் ஆண்டில் நடந்த இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் அவரது உருவத்துடன் கூடிய பனியனை அணிந்து களம் கண்ட தென்ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதேபோன்ற செயலை செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய அணி அனுமதி பெற்றதன் நோக்கம் வேறானது. ஆனால் அது நடந்து கொண்டது வேறுவிதமாகும். இது தொடர்பாக நாங்கள் ஏற்கனவே ஐ.சி.சி.க்கு கடிதம் எழுதி இருக்கிறோம். ஐ.சி.சி.எந்தவித குழப்பமும் இல்லாமல் இந்திய அணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் அரசியல் செய்யவில்லை. அரசியலுக்காக கிரிக்கெட்டை பயன்படுத்தவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story