ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர்


ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர்
x
தினத்தந்தி 4 May 2019 7:41 AM GMT (Updated: 4 May 2019 9:05 AM GMT)

ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள், முன்பை போன்று இப்போது அமைதியாக நடப்பதில்லை.

கிரிக்கெட் போட்டிகள், முன்பை போன்று இப்போது அமைதியாக நடப்பதில்லை. எதிரெணி வீரர்களை வம்புக்கு இழுக்கிறார்கள். வார்த்தை வசைப்பாடல்களுடன், அடிதடி சம்பவங்களும் அரங்கேறுகிறது. இதை தடுக்க முயலும் நடுவர்களையும், வீரர்கள் ஒரு கை பார்த்துவிடுகிறார்கள். அதேசமயம் நடுவரின் முடிவுகளையும் வீரர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள், எதிர்க்கிறார்கள்.

‘நோ-பால்’ சர்ச்சை, ‘அகல பந்து’ சர்ச்சை, ‘எல்.பி.டபிள்யூ’ மற்றும் ‘டிப்-கேட்ச்’ முறையில் ‘அவுட்’ கொடுத்ததில் சர்ச்சை... என ஆண் நடுவர்களுக்கே, பெரும் சவாலாக இருக்கும் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில், கிளாரி போலோசாக் என்ற பெண் நடுவரும் மல்லுகட்ட இருக்கிறார். ஆம்...! கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ‘வேர்ல்ட் கிரிக்கெட் லீக் டிவிஷன்- 2’ தொடரின் இறுதிப்போட்டியில், நமீபியா மற்றும் ஓமன் அணிகள் மோதிய ஆட்டத்தில், முதல் பெண் களநடுவராக களமிறங்கி, உலக சாதனை படைத்திருக்கிறார். ஆண்கள் கிரிக்கெட்டில் களநடுவராக கால் பதித்திருக்கும் முதல் பெண் நடுவர் இவரே.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிளாரிக்கு, 31 வயதாகிறது. இவர் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நடுவராக பணியாற்றி வருகிறார். அதே ஆண்டில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டியில்தான், கிளாரி நடுவராக களமிறங்கினார். இதுவரை பெண்கள் கிரிக்கெட்டில் 15 ஒரு நாள் போட்டியில் நடுவராகச் செயல்பட்டுள்ளார். ஐ.சி.சி. நடத்திய தொடர்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். 2018-ல் நடந்த பெண்கள் உலகக்கோப்பை டி-20 அரையிறுதிப்போட்டியிலும் நடுவராக இருந்துள்ளார்.

‘‘நான் ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக நிற்கப்போகிறேன் என்பதே சிலிர்ப்பை ஏற்படுத்தியது. நான் நடுவராக எவ்வளவு தூரம் வளர்ச்சி அடைந்திருக்கிறேன் என்பதற்கு, இதுவே சான்று. ஆண்கள் கிரிக்கெட்டில் பெண் நடுவர்கள் நிற்பதை அதிகப்படுத்த வேண்டும். நிறைய பெண் நடுவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. வாய்ப்பு வழங்குவதில்தான், பெண்களின் வளர்ச்சி இருக்கிறது’’ என்று தன்னம்பிக்கையோடு பேசும் கிளாரி, கிரிக்கெட் விளையாட்டை நடுவராக நின்று ரசிப்பதோடு சரி, விளையாடிய அனுபவம் இல்லை என்கிறார்.

‘‘ஆண்கள் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்ததும் நண்பர்களிடம் இருந்து நிறைய ‘எச்சரிக்கை’ செய்திகள் வந்தன. ஆண்கள் கோபமாக நடந்து கொள்வார்கள், நடுவரை முறைப்பார்கள், கேலி செய்வார்கள், சில சமயங்களில் உள்நோக்கத்தோடு பந்தை நடுவர் மீது எறிவார்கள், இப்படி, அப்படி.... என ஏராளமான செய்திகள் என் காதுகளுக்கு வந்துக்கொண்டே இருந்தன. ஆனால் எனக்கு இவற்றின் மீது எல்லாம் துளியும் நம்பிக்கை இல்லை. ஏனெனில் பெண்கள் கிரிக்கெட்டை விட, ஆண்கள் கிரிக்கெட் மிகவும் ‘ஜெண்டில்’ ஆனது.

ரன் ஓடும்போது அவுட் ஆகினால், நடுவரின் தீர்ப்பிற்கு காத்திருக்காமல், தாங்களாகவே வெளியேறும் பேட்ஸ்மேன்களை நான் பார்த்திருக்கிறேன். அதேசமயம் நடுவரின் காதுகளுக்கு கேட்காத ‘டிப்-கேட்ச்’ சந்தர்ப்பங்களின் போதும்கூட, தாங்களாகவே பெவிலியனை நோக்கி நடையை கட்டும் ஆட்டக்காரர்களும் இருக்கிறார்கள். எல்லா ஆட்டங்களிலும், ஏதாவதொரு சந்தர்ப்பங்களில் ஆக்ரோஷம் வெளிப்படுவது இயல்பான ஒன்றுதான். பெண்கள் கிரிக்கெட்டிலும், சண்டை சச்சரவுகள் நிகழ்ந்தது உண்டு. இருப்பினும் ஆண்கள் கிரிக்கெட்டை மட்டும் இப்படி சுட்டிக்காட்டி பேசுவது தவறான ஒன்று’’ என்பவர், ஆண்கள் கிரிக்கெட்டில் பயப்படும் ஒரு விஷயத்தை பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.

‘‘கிரிக்கெட் போட்டிகளின் போது பந்து தாக்கி வீரர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் ஆங்காங்கு நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. இதுவரை பெண்கள் கிரிக்கெட்டில் நடுவராக நின்று, என்னுடைய உயிரை காப்பாற்றிவிட்டேன். ஆனால் ஆண்கள் கிரிக்கெட் ஒருவிதமான பயத்தை கொடுக்கிறது. ஏனெனில் ஆண்களின் ஆட்டம் அதிரடியாக இருக்கும். துப்பாக்கி குழலில் இருந்து தோட்டா சீறி பாய்வதை போன்று, ஆட்டக்காரரின் பேட்டில் இருந்து பந்து சீறிப்பாய்ந்தபடி வரும். அந்த சமயத்தில் சாதுரியமாக உடலை நகர்த்தாவிட்டால், பந்து என் உடலை மட்டுமல்ல, உயிரையும் பதம் பார்த்துவிடும். இந்த ஒரு விஷயம்தான் என்னை பதைபதைக்க செய்கிறது’’ என்கிறார்.


Next Story