‘இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பீல்டிங் காரணம்’ - விராட்கோலி கருத்து


‘இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பீல்டிங் காரணம்’ - விராட்கோலி கருத்து
x
தினத்தந்தி 9 Dec 2019 11:51 PM GMT (Updated: 9 Dec 2019 11:51 PM GMT)

‘வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பீல்டிங் காரணம்’ என்று கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 54 ரன்கள் சேர்த்தார். ரிஷாப் பண்ட் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

பின்னர் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டி பதிலடி கொடுத்ததுடன், தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. சிமோன்ஸ் 67 ரன்னும், நிகோலஸ் பூரன் 38 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். வெஸ்ட்இண்டீஸ் வீரர் சிமோன்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். தொடரை வெல்வது யார்? என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நாளை நடக்கிறது. வாஷிங்டன் சுந்தர், விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் ஆகியோர் எளிய கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டது இந்திய அணிக்கு பாதகமாக அமைந்தது.

தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-

முதல் 16 ஓவர்களில் எங்களது பேட்டிங் சிறப்பாகவே இருந்தது. கடைசி 4 ஓவர்களில் 40 முதல் 45 ரன்கள் வரை வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் 30 ரன்கள் தான் எடுத்தோம். இந்த விஷயத்தில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஷிவம் துபே ஆட்டத்தால் தான் 170 ரன்களை தொட முடிந்தது. கடைசி கட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணியினர் சிறப்பாக பந்து வீசி எங்கள் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினார்கள்.

இதுபோல் மோசமாக பீல்டிங் செய்தால் எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் அது வெற்றிக்கு போதுமானதாக இருக்காது. கடைசி 2 ஆட்டத்திலும் எங்களது பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. ஒரே ஓவரில் 2 கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டோம். அந்த ஒரு ஓவரில் 2 விக்கெட்டுகளை வெஸ்ட்இண்டீஸ் இழந்து இருந்தால் ஆட்டம் எப்படி இருந்து இருக்கும். மோசமான பீல்டிங்கே தோல்விக்கு காரணமாகும். எல்லோரும் பீல்டிங்கில் அதிக தைரியத்துடன் செயல்பட வேண்டியது அவசியமானதாகும். வெஸ்ட்இண்டீஸ் அணியினர் சுழற்பந்து வீச்சாளர்களை தொடக்கத்திலேயே பந்து வீச பயன்படுத்துவார்கள் என்பது எங்களுக்கு தெரியும். எனவே ஷிவம் துபேவை முன்கூட்டியே களம் இறக்க முடிவு செய்தோம். எங்களின் அந்த திட்டத்துக்கு நல்ல பலன் கிடைத்தது. வெஸ்ட்இண்டீஸ் அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்கள் வெற்றி பெறுவதற்கு தகுதியான அணியாவார்கள். மும்பையில் அடுத்து நடைபெறும் போட்டி வாழ்வா? சாவா? போராட்டமாகும். இவ்வாறு விராட்கோலி கூறினார்.

வெற்றிக்கு பிறகு வெஸ்ட்இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் அளித்த பேட்டியில், ‘சிறப்பாக பேட்டிங் செய்த இந்திய அணியை 170 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது அருமையான விஷயமாகும். இந்த ஆட்டத்தை எப்படி அணுக வேண்டும் என்பது குறித்து கலந்து ஆலோசித்து களம் கண்டோம். எங்களது திட்டத்துக்கு தகுந்தபடி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். கரீபியன் லீக் போட்டியில் சிறப்பாக விளையாடிய எங்கள் வீரர்கள் இந்த போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இளம் வீரர்களின் சிறந்த ஆட்டம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஹேடன் வால்ஷ், கேஸ்ரிக் வில்லியம்ஸ் அபாரமாக பந்து வீசினார்கள். சிமோன்ஸ் பேட்டிங் நன்றாக இருந்தது. நான் தொடர்ந்து எனது ஆட்டத்தை அனுபவித்து விளையாடி வருகிறேன். எனது கிரிக்கெட் அனுபவத்தை முழுமையாக இளம் வீரர்களுக்கு கற்று கொடுப்பேன். நாங்கள் ஒரு அணியாக ஒருங்கிணைந்து செயல்பட்டால் தொடர்ந்து இதுபோன்ற வெற்றிகளை பெற முடியும். இந்த அணிக்கு கேப்டனாக இருப்பது பெருமை அளிக்கிறது. கிரிக்கெட் விளையாடுவதற்கான திறமையை கடவுள் எனக்கு அளித்து இருக்கிறார். நான் இங்கு வெற்றி பெறுவதற்காக தான் வந்தேன். கேப்டனான பிறகு வெற்றி வேட்கை வலுவடைந்து இருக்கிறது. இருப்பினும் நாங்கள் இன்னும் சில துறைகளில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் அதிகமாக வைடு மற்றும் நோ-பால் வீசுவதை தவிர்க்க வேண்டும். மும்பை போட்டியை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்’ என்று தெரிவித்தார்.

Next Story