‘இங்கிலாந்து அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான விஷயம் கிடையாது’ - வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் கருத்து


‘இங்கிலாந்து அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான விஷயம் கிடையாது’ - வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் கருத்து
x
தினத்தந்தி 13 July 2020 10:30 PM GMT (Updated: 13 July 2020 7:08 PM GMT)

‘இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது எளிதான விஷயமல்ல. 4-வது நாளில் அபாரமாக பந்து வீசியது வெற்றிக்கு உதவியது’ என்று வெஸ்ட்இண்டீஸ் அணியின் கேப்டன் ஜாசன் ஹோல்டர் தெரிவித்தார்.

சவுதம்டன், 

இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து அணி 204 ரன்னும், வெஸ்ட்இண்டீஸ் அணி 318 ரன்னும் எடுத்தன. 114 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 5-வது மற்றும் கடைசி நாள் காலையில் 313 ரன்கள் எடுத்து ‘ஆல்அவுட்’ ஆனது.

பின்னர் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 64.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்ற ஜெர்மைன் பிளாக்வுட் 95 ரன்னில் ஆட்டம் இழந்தார். கேப்டன் ஜாசன் ஹோல்டர் 14 ரன்னுடனும், காயத்துடன் களம் கண்ட ஜான் கேம்ப்பெல் 8 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட்டுகள் வீழ்த்திய வெஸ்ட்இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷனோன் கேப்ரியல் ஆட்டநாயகன் விருது பெற்றார். வெஸ்ட்இண்டீஸ் அணியின் ‘டாப்-4’ வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தாலும், அந்த அணி 200 ரன் இலக்கை எட்டிப்பிடித்து சாதித்தது. தொடக்க வரிசையை சேர்ந்த 4 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் நடையை கட்டி ஒரு அணி 100 ரன்களுக்கு மேற்பட்ட இலக்கை எட்டுவது 1902-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்முறையாகும்.

இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 16-ந் தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது. கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதலின்படி நடைபெற இருக்கும் இந்த போட்டியையும் நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 117 நாட்கள் இடைவெளிக்கு பிறகு அரங்கேறிய முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியான இந்த டெஸ்டில் வெற்றி பெற்ற வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு முன்னாள் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமண் (இந்தியா), பிரையன் லாரா, டேரன் சேமி (வெஸ்ட்இண்டீஸ்), மைக்கேல் வாகன் (இங்கிலாந்து), குமார் சங்கக்கரா (இலங்கை), இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி உள்பட பலரும் சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

4-வது நாள் பந்து வீச்சு அபாரம்

வெற்றிக்கு பிறகு வெஸ்ட்இண்டீஸ் அணியின் கேப்டன் ஜாசன் ஹோல்டர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடினமான போராட்டத்துக்கு பிறகு எங்களுக்கு சாதகமான முடிவு கிடைத்துள்ளது. 4-வது நாளில் எங்களது வீரர்களின் பந்து வீச்சு மிகவும் நன்றாக இருந்தது. அது எங்களின் சிறப்பான வெற்றிக்கு வித்திட்டது. இதனை எனது தலைமையில் அணியின் சிறந்த செயல்பாடு என்று நினைக்கிறேன். சிறப்பாக பந்து வீசும்படி கேட்டுக்கொண்டதற்கு மறுப்பு தெரிவிக்காமல் எல்லா பவுலர்களும் சோர்வை பொருட்படுத்தாமல் முழுமூச்சுடன் திறனை வெளிப்படுத்தினார்கள். பீல்டர்களும் நாள் முழுக்க உத்வேகத்தை இழக்காமல் செயல்பட்டனர்.

2-வது இன்னிங்சில் பென் ஸ்டோக்ஸ், ஜாக் கிராவ்லி ஆகியோர் பேட்டிங் செய்த விதத்தை பார்க்கையில் (ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்கு 249 ரன்கள்) எங்களுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாகவே தெரிந்தது. அதேநேரத்தில் நாங்கள் தோல்வியை சந்திக்க மாட்டோம் என்பது எங்களுக்கு தெரியும். இந்த போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம் என்பதால் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினோம். கடந்த காலங்களில் நாங்கள் பல கடினமான நாட்களை சந்தித்து இருப்பதால் இந்த போட்டியில் ஸ்டோக்ஸ்-கிராவ்லி பார்ட்னர்ஷிப்பை உடைத்தால் தான் வெற்றி பெற முடியும் என்பதை அறிந்து செயல்பட்டோம். அதிர்ஷ்டவசமாக நான் ஸ்டோக்ஸ் விக்கெட்டை கைப்பற்றினேன். கிராவ்லியை, அல்ஜாரி ஜோசப் அருமையாக பந்து வீசியதுடன், அவரே கேட்ச் செய்து வெளியேற்றினார். அவர்கள் இருவரது விக்கெட்டை வீழ்த்தியதும் எங்களுக்கு சிறப்பான விஷயம் நடக்க போகிறது என்பது எனக்கு தெரியும். அது ஆட்டத்தின் திருப்புமுனையாக இருந்தது.

எளிதான சாதனை கிடையாது

கடந்த காலங்களில் போட்டி தொடர்களில் நல்ல தொடக்கம் காணாமல் நாங்கள் பிறகு சரிவில் இருந்து மீள வேண்டியதாக இருந்துள்ளது. சிறந்த வீரரான ஜோரூட் இல்லாதது இங்கிலாந்து அணிக்கு பெரிய இழப்பாகும். அந்த வாய்ப்பை நாங்கள் சரியாக பயன்படுத்தி கொண்டோம். இது மிகப்பெரிய வெற்றியாகும். இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது எளிதான விஷயமல்ல. அந்த சாதனையை நாங்கள் செய்து காட்டி இருக்கிறோம். இதற்கு முன்பு கடைசியாக 2017-ம் ஆண்டில் அவர்களை இதேபோல் நாங்கள் வீழ்த்தி இருந்தோம். டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கி இருப்பது எங்களுக்கு நல்ல நம்பிக்கையை அளித்து இருக்கிறது. அத்துடன் எங்களது இந்த செயல்பாடு மிகுந்த பெருமை அளிக்கிறது.

கடைசி நாளின் தொடக்கத்தில் எங்களுக்கு சற்று பதற்றம் ஏற்பட்டாலும், எங்கள் பேட்ஸ்மேன்கள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து விட்டால் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை அறிவோம். இங்கிலாந்து வீரர்கள் கடைசி வரை கடுமையாக நெருக்கடி அளித்தனர். இந்த போட்டிக்காக நாங்கள் நன்கு தயாராகி இருந்தோம். நாங்கள் சிறப்பாக தயாராக எங்களுடைய மாற்று வீரர்கள் உதவியாக இருந்தனர். இந்த வெற்றியின் பெருமையில் மாற்று வீரர்களுக்கும் பங்கு உண்டு. இவ்வாறு ஜாசன் ஹோல்டர் கூறினார்.

பென் ஸ்டோக்ஸ் கருத்து

தோல்வி குறித்து இங்கிலாந்து அணியின் பொறுப்பு கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து தெரிவிக்கையில், ‘சர்வதேச கிரிக்கெட் போட்டி மீண்டும் நடந்து இருப்பது சிறப்பானதாகும். நிறைய மக்களுக்கு மத்தியில் விளையாடி பழக்கப்பட்ட எங்களுக்கு இந்த போட்டி சற்று விசித்திரமாக இருந்தது. கிரிக்கெட் போட்டியை மீண்டும் மக்கள் திரையில் பார்க்க முடிந்தது அருமையான விஷயமாகும். கடும் சவால் நிறைந்த இந்த போட்டி 5 நாட்கள் வரை நீடித்தது இரு அணிகளின் திறனை வெளிப்படுத்துவதாக இருந்தது. வெற்றி இலக்கு மீது நம்பிக்கை வைக்க வேண்டும். வெற்றி இலக்கு போதுமானதாக இல்லை என்று சிந்திக்க தொடங்கினாலே நீங்கள் தோற்க தொடங்கி விடுவீர்கள். நாங்கள் முதல் இன்னிங்சில் சிறப்பாக செயல்பட்டு அதிக ரன்கள் குவித்து இருந்தால் ஆட்டம் எங்களுக்கு சாதகமாக அமைந்து இருக்கலாம். ஸ்டூவர்ட் பிராட்டை அணியில் சேர்க்காதது குறித்து வருத்தப்பட்டால் அது அணியின் உள்ள மற்ற வீரர்களுக்கு தவறான எண்ணத்தை தரலாம். அணியில் இடம் கிடைக்காதது குறித்து அவர் அளித்து இருந்த பேட்டி நன்றாகவே இருந்தது. இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் அழுத்தம் இருந்தது. இந்த தோல்வியை பாடமாக எடுத்து கொண்டு அடுத்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்படுவோம். அடுத்த போட்டிக்கு தேர்வு செய்ய எங்களிடம் மாற்று வீரர்கள் நிறைய பேர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தோல்வி மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அடுத்த போட்டிக்கு கேப்டன் ஜோரூட் களம் திரும்புவதை எதிர்நோக்கி இருக்கிறோம்‘ என்றார்.

Next Story