வெஸ்ட் இண்டீசுக்கு பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து? - 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்


வெஸ்ட் இண்டீசுக்கு பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து?  - 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 15 July 2020 11:00 PM GMT (Updated: 15 July 2020 9:48 PM GMT)

இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்குகிறது. முந்தைய தோல்விக்கு இங்கிலாந்து அணி பதிலடி கொடுக்குமா என்று உள்ளூர் ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

மான்செஸ்டர், 

கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் மருத்துவ பாதுகாப்புடன் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ரசிகர்கள் இன்றி சவுதம்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டு ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

சொந்த மண்ணில் உதை வாங்கிய இங்கிலாந்து அணி எழுச்சி பெற வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டு உள்ளது. தனது மனைவிக்கு குழந்தை பிறந்ததால் முதலாவது டெஸ்டில் ஆடாத இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மீண்டும் அணியுடன் இணைந்து விட்டார். அவரது வருகை நிச்சயம் இங்கிலாந்தின் பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும். ஜோ ரூட்டுக்கு வழிவிடும் வகையில் ஜோ டென்லி நீக்கப்படுகிறார். முதலாவது டெஸ்டில் கழற்றி விடப்பட்டதால் ஆத்திரமடைந்த மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், நன்றாக விளையாடி வந்த தன்னை ஏன் நீக்கினார்கள் என்று தெரியவில்லை என்று விமர்சித்தார். இன்றைய டெஸ்டில் அவருக்கு இடம் கிடைக்குமா? என்பது போட்டிக்கு முன்பாகத் தான் தெரிய வரும். இந்த மைதானம் இங்கிலாந்துக்கு ராசியானது. இங்கு கடைசியாக ஆடிய 12 டெஸ்டில் ஒன்றில் மட்டுமே தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெஸ்ட் இண்டீஸ் அணி எப்படி?

முதலாவது டெஸ்டில் கிடைத்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியால் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் கூடுதல் உத்வேகம் அடைந்துள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களான கேப்டன் ஜாசன் ஹோல்டர் (மொத்தம் 7 விக்கெட்), ஷனோன் கேப்ரியல் (9 விக்கெட்) ஆகியோரின் அபார பந்து வீச்சும், 2-வது இன்னிங்சில் ஜெர்மைன் பிளாக்வுட்டின் (95 ரன்) சாதுர்யமான பேட்டிங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு வித்திட்டது. இதே நம்பிக்கையுடன் 2-வது டெஸ்டிலும் சாதிக்கும் முனைப்புடன் காத்திருக்கிறார்கள். இதிலும் வெற்றி பெற்றால் இங்கிலாந்து மண்ணில் 32 ஆண்டுகளுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை கைப்பற்றிய பெருமையை பெறும்.

வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் பில் சிமோன்ஸ் கூறுகையில், ‘முதலாவது டெஸ்ட் வெற்றியால் வெஸ்ட் இண்டீஸ் வீரர் மனநிறைவு அடைந்து விடக்கூடாது. முதலாவது டெஸ்டில் எப்படி விளையாடினோமோ இதே போன்று 2-வது டெஸ்டிலும் முயற்சிக்க வேண்டும். இப்போது வரலாறு படைக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. அடுத்த 5 நாட்கள் களத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சிந்தித்து செயல்பட வேண்டும்’ என்றார்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இங்கிலாந்து: ரோரி பர்ன்ஸ், டாம் சிப்லி, ஜோ ரூட் (கேப்டன்), ஜாக் கிராவ்லி, ஆலிவர் போப், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், டாம் பெஸ், ஜோப்ரா ஆர்ச்சர், மார்க்வுட் அல்லது ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

வெஸ்ட் இண்டீஸ்: கிரேக் பிராத்வெய்ட், ஜான் கேம்ப்பெல், ஷாய் ஹோப், ஷமார் புரூக்ஸ், ரோஸ்டன் சேஸ், பிளாக்வுட், ஷேன் டாவ்ரிச், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), அல்ஜாரி ஜோசப், கெமார் ரோச், கேப்ரியல்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Next Story