ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று 2 ஆட்டங்கள்; பெங்களூரு-ராஜஸ்தான், கொல்கத்தா- டெல்லி மோதல்


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று 2 ஆட்டங்கள்; பெங்களூரு-ராஜஸ்தான், கொல்கத்தா- டெல்லி மோதல்
x
தினத்தந்தி 2 Oct 2020 10:27 PM GMT (Updated: 2 Oct 2020 10:27 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தோள்பட்டை காயத்தால் கடந்த இரு ஆட்டங்களில் விளையாடவில்லை. முந்தைய நாள் பயிற்சி சீசனில் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் நன்றாகவே செயல்பட்டார். அதனால் இன்றைய ஆட்டத்துக்கான அணித்தேர்வுக்கு அவர் தயாராக இருக்கலாம் என்று பந்துவீச்சு பயிற்சியாளர் ரையான் ஹாரிஸ் நேற்று தெரிவித்தார்.

பெங்களூரு அணியின் தூண் டிவில்லியர்ஸ் மூன்று தினங்களுக்கு முன்பு, வெப்பத்தின் தாக்கத்தால் உடல் சோர்வு மற்றும் லேசான தசைப்பிடிப்பால் அவதிப்பட்டதால் இன்றைய ஆட்டத்தில் விக்கெட் கீப்பிங் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் களம் காண வாய்ப்புள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், இந்த சீசனில் ஒரே நாளில் இரண்டு லீக் ஆட்டங்கள் முதல் முறையாக இன்று (சனிக்கிழமை) நடக்கின்றன.

அபுதாபியில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடக்கும் 15-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், ஸ்டீவன் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் தலா 2 வெற்றி, ஒரு தோல்வி என்று 4 புள்ளிகளுடன் உள்ளன.

பெங்களூரு அணியில் டிவில்லியர்ஸ், தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் சூப்பர் பார்மில் உள்ளனர். கோலியும் (முதல் 3 ஆட்டத்தில் 14, 1, 3 ரன்) ரன்வேட்டைக்கு திரும்பினால் இன்னும் வலிமையாகி விடுவார்கள். இதே போல் ராஜஸ்தான் அணியில் ஸ்டீவன் சுமித், சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், திவேதியா நிலைத்து நின்று விட்டால் எதிரணி பாடு திண்டாட்டம்தான். இவர்களில் யார் கை ஓங்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 10-ல் ராஜஸ்தானும், 8-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றன. 2 ஆட்டத்தில் முடிவு இல்லை. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி புள்ளிபட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும்.

சார்ஜாவில் இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்சும் 3-வது வெற்றியை அறுவடை செய்ய பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

சிறிய மைதானமான சார்ஜாவில் இதுவரை நடந்துள்ள 2 ஆட்டங்களில் மொத்தம் 62 சிக்சர்கள் நொறுக்கப்பட்டுள்ளன. விளையாடிய 3 அணிகளும் 200 ரன்களுக்கு மேல் குவித்துள்ளன. ஆந்த்ரே ரஸ்செல், இயான் மோர்கன், சுப்மான் கில் (மூன்று பேரும் கொல்கத்தா), ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், ஷிகர் தவான், ஹெட்மயர் (டெல்லி) என்று இரு அணிகளிலும் அதிரடி சூரர்கள் வரிந்து கட்டுவதால் நிச்சயம் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.

இவ்விரு அணிகளும் இதற்கு முன்பு 23 ஆட்டங்களில் சந்தித்துள்ளன. இதில் 13-ல் கொல்கத்தாவும், 9-ல் டெல்லியும் வெற்றி கண்டன. ஒரு ஆட்டம் சமனில் முடிந்தது.

Next Story