முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தானிடம் வெஸ்ட்இண்டீஸ் தோல்வி


முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தானிடம் வெஸ்ட்இண்டீஸ் தோல்வி
x
தினத்தந்தி 13 Dec 2021 7:18 PM GMT (Updated: 13 Dec 2021 7:18 PM GMT)

பாகிஸ்தான் - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையே நடைபெற்ற முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

கராச்சி, 

பாகிஸ்தான் சென்று இருக்கும் வெஸ்ட்இண்டீஸ் அணி, அந்த நாட்டு அணிக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. 

வெஸ்ட்இண்டீஸ் அணியில் 3 வீரர்கள் உள்பட 4 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் பாகிஸ்தான்-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி கராச்சியில் நேற்று நடந்தது.

‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட்இண்டீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் ரன் எதுவும் எடுக்காமலும், பஹர் ஜமான் 10 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் 35 ரன்னுக்குள் (4.5 ஓவர்களில்) 2 விக்கெட்டுகள் இழந்து தடுமாறிய அந்த அணியை 3-வது விக்கெட் இணையான முகமது ரிஸ்வான் (78 ரன்கள், 52 பந்துகள், 10 பவுண்டரி), ஹைதர் அலி (68 ரன்கள், 39 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) ஆகியோர் அடித்து ஆடி சரிவில் இருந்து மீட்டதுடன் வலுவான நிலைக்கு உயர்த்தினார்கள். 

20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது. கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய முகமது நவாஸ் 10 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 30 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

பின்னர் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 19 ஓவர்களில் 137 ரன்னில் சுருண்டது. இதனால் பாகிஸ்தான் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் முகமது வாசிம் 4 விக்கெட்டும், ஷதப்கான் 3 விக்கெட்டும் சாய்த்தனர். 

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்று (மாலை 6.30 மணி) நடக்கிறது.


Next Story