கிரிக்கெட்டின் விதிமுறைகளில் திருத்தம்! புதிய விதிகள் அக்டோபர் 1 முதல் அமல்!!


கிரிக்கெட்டின் விதிமுறைகளில் திருத்தம்! புதிய விதிகள் அக்டோபர் 1 முதல் அமல்!!
x
தினத்தந்தி 9 March 2022 9:32 AM GMT (Updated: 9 March 2022 9:32 AM GMT)

புதிய விதிகளின்படி, மேன்கேடிங் முறையில் ஆட்டமிழந்தால் அது ரன் அவுட் என்று கணக்கில் கொள்ளப்படும்.

லண்டன்,

கிரிக்கெட் விளையாட்டின் சட்ட திட்டங்களை வரையறுக்கும் உரிமையை லண்டனில் 1787 ம் ஆண்டு தொடங்கப்பட்ட மேரிலிபோர்ன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) பெற்றிருக்கிறது, இது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் செயல்படுகிறது.

ஏற்கனவே 2017 ம் ஆண்டு கிரிக்கெட் விதிமுறைகளில் சில மாற்றங்களை செய்தது எம்.சி.சி., இந்த நிலையில் கடந்த வாரம் புதிய மாற்றங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. 

மேரிலேபோன் கிரிக்கெட் கிளப், சர்வதேச கிரிக்கெட் விதிகளில் திருத்தங்களை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் இந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும். 

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக கிரிக்கெட் விதிகளில் மாற்றம் வருகிறது.அவற்றில் சில குறிப்பிடும்படியான புதிய விதிமுறைகள்:-

விதி 41.3  கொரோனா காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட உமிழ்நீர் பயன்படுத்தி பந்தை தேய்க்கக்கூடாது என்ற விதிமுறையை நிரந்தரமாக ஆக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

விதி 18.11  களத்தில் இருக்கும் ஒரு வீரர் ஆட்டமிழந்தவுடன், புதிதாக உள்ளே வரும் வீரர் தான் இனிமேல் ஸ்டிரைக்கில் நிற்பார். அவர் தான் அடுத்த பந்தை எதிர்கொள்வார்.

விதி 38.3  மேன்கேடிங் முறையில் ஆட்டமிழந்தால் அது ரன் அவுட் என்று கணக்கில் கொள்ளப்படும்,

விதி 21.4  விளையாட்டின் நடுவே மைதனத்தில் யாராவது மனிதர்களோ, விலங்குகளோ ஏதேனும் இடையூறு ஏற்படுத்தினால் அந்த பந்து டெட் பால் என்று அறிவிக்கப்படும்.

விதி 21.4 : நோ பால் இல்லை

பந்தை வீச ஓடி வந்து பந்து வீசாமல் எதிர்முனையில் உள்ள பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்ய பந்தை தூக்கி எறிவது இனி டெட் பாலாக கருதப்படும். இதுவரை இது நோ பால் என்று அழைக்கப்படுகிறது.

விதி 22.1 : வைட்

பந்து வீச்சாளர் ரன்-அப் தொடங்கிய போது பேட்ஸ்மேன் நின்றிருந்த இடத்தில் இருந்து விலகிச் செல்லும் பந்து வைட் என்று புதிய வீதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.தற்போது பந்துவீசுபவர் ரன்-அப் தொடங்கிய பின் பேட்ஸ்மேன் நகரும் இடத்தில் இருந்து விலகிச் சென்றால் மட்டுமே வைட் கொடுக்கப்படுகிறது.

விதிகள் 27.4 மற்றும் 28.6 - பீல்டர்களின் நியாயமற்ற செய்கைகள்

பந்து வீசும் போது பீல்டர் செய்யும் ஆட்சேபனைக்கு உரிய காரியத்தால் டெட் பால் என்று தற்போது கூறப்படுகிறது. இனி, பீல்டங் அணியின் இந்த நியாயமற்ற செய்கைக்கு பேட்டிங் அணிக்கு 5 ரன்கள் பெனால்டி ரன்களாக வழங்கப்படும்.

Next Story