சதம் விளாசிய டோனி டி ஜோர்ஜி..!! - இந்தியாவை வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா அணி
இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது.
கெபேஹா,
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த நிலையில் அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கெபேஹா நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று இரவு நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 46.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 62 ரன்களும், கேப்டன் கே.எல்.ராகுல் 56 ரன்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா அணியின் சார்பில் அதிகபட்சமாக பர்கர் 3 விக்கெட்டுகளும், ஹென்ரிக்ஸ் மற்றும் மகராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் ரீசா ஹென்ரிக்ஸ் மற்றும் டோனி டி ஜோர்ஜி ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய இந்த ஜோடி அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தியது. இந்த ஜோடியில் தனது அரை சதத்தை பதிவு செய்திருந்த ஹென்ரிக்ஸ் 52 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். மறுமுனையில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோர்ஜி தனது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
அடுத்து களமிறங்கிய வாண்டர் டூசென் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஜோர்ஜி 122 பந்துகளில் 6 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் 119 ரன்களும், கேப்டன் மார்க்ரம் 2 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 42.3 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதன்மூலம் இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது. இதன்படி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 1-1 என்ற புள்ளிக்கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.