நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: பாகிஸ்தான் அபார வெற்றி


நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: பாகிஸ்தான் அபார வெற்றி
x

image courtesy: Pakistan Cricket twitter

பாகிஸ்தான் அணி 48.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

ராவல்பிண்டி,

நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 336 ரன்கள் எடுத்தது. டேரில் மிட்செல் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 129 ரன்னில் அவுட்டானார். தொடக்க ஆட்டக்காரர் சாட் பவுஸ் அரை சதமடித்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் லாதம் 98 ரன்னில் வெளியேறினார். பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நசீம் ஷா ஒரு விக்கெட் எடுத்தார்.

இதையடுத்து, 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் கடந்த ஆட்டத்தைப் போலவே சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து 180 ரன்கள் குவித்தார். பாபர் அசாம் 65 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய முகமது ரிஸ்வான் 54 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில், பாகிஸ்தான் அணி 48.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் 2-0 என பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது.


Next Story