2வது டி20 கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி


2வது டி20 கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி
x

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.

ராவல்பிண்டி,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது.

அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிம் செய்பர்ட் மற்றும் டிம் ராபின்சன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் செய்பர்ட் 12 ரன், ராபின்சன் 4 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து வீரர்கள் பாகிஸ்தானின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடித்தடுத்து அவுட் ஆகினர். இதில் டீன் பாக்ஸ்க்ராப்ட் 13 ரன், மார்க் சாம்ப்மென் 19 ரன், நீஷம் 1 ரன் , கோல் மெக்கோஞ்சி 15 ரன், மைக்கேல் பிரேஸ்வெல் 4 ரன், சோதி 8 ரன் எடுத்து அவுட் ஆகினர்.

இறுதியில் நியூசிலாந்து அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 90 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சாம்ப்மென் 19 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளும், அமீர் , அப்ரார் அகமது மற்றும் ஷதாப் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

இதையடுத்து 91 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் சார்பில் சயிம் அயூப் மற்றும் கேப்டன் பாபர் அசாம் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் அயூப் 4 ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து பாபர் அசாம் 4 ரன்களும், அடுத்து களமிறக்கிய உஸ்மான் கான் 7 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது ரிஸ்வான் 45 ரன்களும், இர்பான் கான் 18 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து அணியின் சார்பில் லிஸ்டர், பேர்ஸ்வெல் மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. இதன்படி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற புள்ளிக்கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலை வகிக்கிறது.


Next Story