2வது டெஸ்ட் போட்டி: 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 62 ரன் முன்னிலை...!
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி,
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து இந்திய அணி தனது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 21 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் இந்த டெஸ்ட்டின் 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. 2வது நாளான இன்று ரோகித் சர்மா (32), ராகுல் (17), புஜாரா (0), ஸ்ரேயஸ் அய்யர் (4) ஆகியோரை லயன் தனது சுழலில் அவுட்டாக்கினார். இதையடுத்து விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா சிறப்பாக ஆடினார்.
பொறுமையாக ஆடிய ஜடேஜா 16 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த பரத் 6 ரன்னில் அவுட் ஆனார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 44 ரன்னில் இருந்த போது எல்.பு.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த அஷ்வின், அக்சர் படேல் ஜோடி அபாரமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்சர் படேல் அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் அவருக்கு சிறப்பான ஒத்துழைப்பு தந்த அஷ்வின் 37 ரன்னிலும், அடுத்து வந்த ஷமி 2 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இறுதியில் இந்திய அணி 83.3 ஓவர்கள் முடிவில் 262 ரன் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் 74 ரன், கோலி 44 ரன், அஷ்வின் 37 ரன் எடுத்திருந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லயன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து 1 ரன் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.
வார்னர் ஆடாததால் அவருக்கு பதிலாக கவாஜாவுடன் டிராவிஸ் ஹெட் தொடக்க ஆட்டக்காரராக களம் புகுந்தார். இதில் கவாஜா 6 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து டிராவிஸ் ஹெட்டுடன் லபுஸ்சாக்னே ஜோடி சேர்ந்தார். இந்த இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டனர். இறுதியில் 2ம் நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்துள்ளது. இதுவரை அந்த அணி மொத்தனாக 62 ரன் முன்னிலை பெற்றுள்ளது. 3ம் நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.