நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் - இந்திய பொறுப்பு கேப்டன் பாண்ட்யா பேட்டி


நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் - இந்திய பொறுப்பு கேப்டன் பாண்ட்யா பேட்டி
x

2024-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு இந்திய அணியை தயார்படுத்த நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று பொறுப்பு கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறினார்.

வெலிங்டன்,

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் நாளை (வெள்ளிக்கிழமை) இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இதையொட்டி இந்திய பொறுப்பு கேப்டன் ஹர்திக் பாண்ட்யா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ' உலக கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதியுடன் வெளியேறியது மிகுந்த ஏமாற்றம் அளித்தது. ஆனால் நாங்கள் தொழில்முறை வீரர்கள். தோல்வியை ஏற்றுக்கொண்டு, அடுத்த கட்டத்துக்கு முன்னேறி செல்ல வேண்டியது அவசியமாகும். அடுத்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. எனவே திறமையான இளம் வீரர்களை கண்டறிய நமக்கு காலஅவகாசம் உள்ளது. அதற்குள் நிறைய போட்டிகளில் விளையாடுவோம். நிறைய வீரர்கள் போதுமான வாய்ப்பு பெறுவார்கள்.

2024-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு அணியை தயார்படுத்துவதற்கான திட்டமிடல் நியூசிலாந்து தொடரில் இருந்து தொடங்குகிறது. இது புதிய தொடக்கம். எங்களுக்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. அதனால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பிறகு ஆலோசிப்போம். இந்த தொடரில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் திறமையான இளம் வீரர்கள் இங்கு உள்ளனர். அவர்களும் ஓராண்டுக்கு மேலாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்கள். சர்வதேச களத்தில் திறமையை வெளிப்படுத்த போதுமான வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். புதிய வீரர்கள், புதிய உத்வேகம் எல்லாமே உற்சாகம் அளிக்கிறது. இந்திய அணியில் இடத்தை பிடித்த இளம் வீரர்களுக்கு இது நல்ல வாய்ப்பாகும்' என்றார்.

வாகன் விமர்சனத்துக்கு பதிலடி

2011-ம் ஆண்டுக்கு பிறகு வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் (ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) இந்தியாவின் செயல்பாடு சரியாக இல்லை என்று இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் சமீபத்தில் விமர்சித்திருந்தார். இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த பாண்ட்யா, 'நாங்கள் யாருக்காகவும், எதையும் நிரூபிக்க வேண்டிய தேவையில்லை. நீங்கள் நன்றாக ஆடாத போது, விமர்சிக்கத் தான் செய்வார்கள். அதற்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்து இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். விளையாட்டை பொறுத்தவரை தொடர்ந்து தங்களது ஆட்டத்தை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். அதை நோக்கி கடினமாக உழைக்க வேண்டும்' என்றார்.

ஐ.பி.எல். ஏலத்தில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனை எடுக்க குஜராத் டைட்டன்ஸ் ஆர்வம் காட்டுமா என்று பாண்ட்யாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'எனக்கு தெரியவில்லை. இப்போது நான் இந்தியாவுக்காக விளையாடுகிறேன். குஜராத் அணி வில்லியம்சனை வாங்குமா என்பது குறித்து சிந்திக்க இன்னும் அதிக நேரம் உள்ளது' என்றார்.


Next Story