மொத்த அணிக்கு முன்பாக மெக்கல்லமிடம் மன்னிப்பு கேட்டேன் - பழைய நினைவுகளை பகிர்ந்த கம்பீர்


மொத்த அணிக்கு முன்பாக மெக்கல்லமிடம் மன்னிப்பு கேட்டேன் - பழைய நினைவுகளை பகிர்ந்த கம்பீர்
x

image courtesy; AFP

தினத்தந்தி 8 Feb 2024 3:01 PM GMT (Updated: 8 Feb 2024 3:51 PM GMT)

இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் மார்ச் மாதம் இறுதியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் இந்திய முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். குறிப்பாக கடந்த 2 வருடங்களாக லக்னோ அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்த அவர் தற்போது கொல்கத்தா அணிக்கு நகர்ந்துள்ளார்.

ஐ.பி.எல். துவங்கப்பட்டபோது தன்னுடைய சொந்த மாநிலமான டெல்லிக்கு விளையாடிய அவர் பின்னர் கொல்கத்தா அணிக்காக வாங்கப்பட்டு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். அதில் 2010, 2011 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் 2 கோப்பையை வென்ற தோனி தலைமையிலான சென்னையை 2012 ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் வெற்றி பெற விடாமல் வீழ்த்திய கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா, முதல் சாம்பியன் பட்டத்தை முத்தமிட்டது.

அத்துடன் 2014 சீசனில் கொல்கத்தாவுக்கு 2-வது கோப்பையை வென்று கொடுத்த அவர் தோனி மற்றும் ரோகித்தை தொடர்ந்து மூன்றாவது வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் சி.எஸ்.கே. அணிக்கு எதிரான 2012 ஐபிஎல் பைனலுக்கு முன்பாக லட்சுமிபதி பாலாஜி காயத்தை சந்தித்ததால் பிரெட் லீ-யை அணிக்குள் கொண்டு வருவதற்காக நல்ல பார்மில் இருந்த பிரண்டன் மெக்கல்லத்தை நீக்கியதாக கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

அதற்காக அவரிடம் மொத்த அணியினருக்கு முன்பாக வெளிப்படையாக மன்னிப்பு கேட்டதாக பழைய நினைவுகள் குறித்து தெரிவிக்கும் கம்பீர் இது பற்றி இன்ஸ்டாகிராமில் பேசியது பின்வருமாறு;- "2012-ல் சேப்பாக்கத்தில் நடைபெறவிருந்த பைனலுக்கு கிளம்புவதற்கு முன்பாக மொத்த கொல்கத்தா அணிக்கு முன்பாகவும் நான் பிரண்டன் மெக்கல்லத்திடம் மன்னிக்குமாறு சொன்னேன். குறிப்பாக உங்களுடைய நல்ல செயல்பாடுகளின் தாண்டி அணியின் கலவைக்காக பிளேயிங் லெவலினிருந்து உங்களை நீக்க வேண்டியுள்ளதாக அவரிடம் சொன்னேன்.

அப்படி யாரும் செய்ய மாட்டார்கள். ஆனால் நான் மொத்த அணிக்கு முன்பாகவும் மன்னிப்பு கேட்பதற்கான தைரியத்தை கொண்டிருந்தேன். மன்னிப்பு கேட்பதில் தவறில்லை. அந்த வகையில் கேப்டன்ஷிப் என்பது பாராட்டுவது அல்லது பாராட்டுகளை பெறுவது என்பதை மட்டும் பொருத்ததல்ல. அதுபோல மன்னிப்பு கேட்பதும் அதனுடைய ஒரு அங்கமாகும்" என்று கூறினார்.


Next Story