ஆஷஸ் 2-வது டெஸ்ட்: முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 339/5


ஆஷஸ் 2-வது டெஸ்ட்:  முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 339/5
x

Image Courtacy: cricketcomauTwitter

தினத்தந்தி 28 Jun 2023 8:38 PM GMT (Updated: 28 Jun 2023 9:19 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம் கண்டுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பர்மிங்காமில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்தநிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது. இங்கிலாந்து அணியில் மொயீன் அலிக்கு பதிலாக ஜோஷ் டங்குவும், ஆஸ்திரேலிய அணியில் ஸ்காட் போலன்டுக்கு பதிலாக மிட்செல் ஸ்டார்க்கும் சேர்க்கப்பட்டனர்.

'டாஸ்' ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மேகமூட்டமான வானிலையை கருத்தில் கொண்டு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.இதன்படி டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். இருவரும் நிதானமாக ஆடினர். 9 ஓவர்களில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 20 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டு சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆடிய வார்னருக்கு அதிர்ஷ்டம் துணை நின்றது. 20 ரன்னில் அவர் வழங்கிய கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற ஆலி போப் தவற விட்டார். அதன் பிறகு சில பவுண்டரிகளை ஓட விட்ட வார்னர், டங்கு பந்து வீச்சில் சிக்சர் விளாசி அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

சுமித் 9 ஆயிரம் ரன்

ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பான தொடக்கம் அமைத்து தந்த இவர்கள் ஸ்கோர் 73-ஐ எட்டிய போது பிரிந்தனர். கவாஜா (17 ரன்), வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங்கு வீசிய பந்தை வெளியே போவதாக நினைத்து பேட்டை மேல்வாக்கில் உயர்த்தினார். ஆனால் அந்த பந்து ஸ்டம்பு மீது இருந்த பெய்ல்சை தட்டியது. அடுத்து மார்னஸ் லபுஸ்சேன் வந்தார். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு வார்னர் (66 ரன், 88 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஜோஷ் டங்குவின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார்.

3-வது விக்கெட்டுக்கு லபுஸ்சேனுடன், துணை கேப்டன் ஸ்டீவன் சுமித் கூட்டணி போட்டார். இவரும் இங்கிலாந்தின் ஸ்விங் தாக்குதலை திறம்பட சமாளித்து ரன் சேகரித்தனர். அவர்களுக்கு தலா ஒரு முறை நடுவர் தவறான அவுட் வழங்கியதும் பிறகு டி.ஆர்.எஸ்.-ஐ பயன்படுத்தி தப்பியதும் குறிப்பிடத்தக்கது.

சூப்பரான பேட்டிங்கை வெளிப்படுத்திய சுமித் 32 ரன்னில் இருந்த போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்களை கடந்த 4-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்தார். அத்துடன் தனது 99-வது டெஸ்டில் 174 இன்னிங்சில் களம் கண்டு 9 ஆயிரம் ரன்களை தொட்ட அவர் இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய 2-வது வீரர் (முதலில் இலங்கையின் சங்கக்கரா 172 இன்னிங்சில்) என்ற சிறப்பையும் பெற்றார்.

300-ஐ தாண்டியது

அணியின் ஸ்கோர் 198-ஐ எட்டிய போது லபுஸ்சேன் 47 ரன்களில் வீழ்ந்தார். அவருக்கு பிறகு நுழைந்து அதிரடியில் மிரட்டிய டிராவிஸ் ஹெட் 77 ரன்கள் (73 பந்து, 14 பவுண்டரி) நொறுக்கினார். அடுத்து வந்த கேமரூன் கிரீன் (0) தாக்குப்பிடிக்கவில்லை.

ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 83 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 339 ரன்கள் குவித்துள்ளது. ஸ்டீவன் சுமித் 85 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 11 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.




மைதானத்திற்குள் ஓடி வந்த ரசிகர்கள்

இந்த டெஸ்டில் முதல் ஓவர் முடிந்த போது திடீரென இரு ரசிகர்கள் ஆடுகளத்திற்குள் அத்துமீறி ஓடி வந்தனர். சுற்றுசூழல் ஆர்வலர்களான அவர்கள் எண்ணெய், கியாஸ், நிலக்கரி சுரங்கம் போன்றவற்றை எடுக்கும் புதிய திட்டத்திற்கு இங்கிலாந்து அரசாங்கம் அனுமதி வழங்கக்கூடாது என்பதற்கு எதிராக போராடும் இயக்கத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவரை, இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ அப்படியே அலாக்காக தூக்கிக்கொண்டு எல்லைக்கோட்டுக்கு வெளியே போய் விட்டார். பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.


Next Story