ஆஷஸ் 5வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணிக்கு 384 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து


ஆஷஸ் 5வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணிக்கு 384 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து
x

Image Courtesy : ICC Twitter  

ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டும், டாட் மர்பி 4 விக்கெட்டும் ஹேசில் வுட் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

லண்டன்,

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரில் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் நடந்து வருகிறது. இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 283 ரன்னில் ஆட்டமிழந்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 103.1 ஓவர்களில் 295 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. 12 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் ஆகியோர் களம் கண்டனர். முதல் இன்னிங்சை போலவே இந்த இன்னிங்சிலும் இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக ஆடி வேகமாக ரன் சேர்த்தனர்.

. பென் டக்கெட் 42 ரன்னில் மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் சிக்கினார். 61 பந்துகளில் அரைசதத்தை கடந்த ஜாக் கிராவ்லி 73 ரன்னில் (76 பந்து, 9 பவுண்டரி) கம்மின்ஸ் பந்து வீச்சில் வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து ஜோ ரூட், கேப்டன் பென் ஸ்டோக்சுடன் இணைந்தார். சிறப்பாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் 42 ரன்னில் (67 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) டாட் மர்பி சுழலில் அவுட் ஆனார். அடுத்து களம் கண்ட ஹாரி புரூக் (7 ரன்) நிலைக்கவில்லை.

இதனையடுத்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட்டுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நேர்த்தியாக ஆடி அணிக்கு மேலும் வலுவூட்டினார்கள். சதத்தை நெருங்கிய ஜோ ரூட் 91 ரன்னில் (106 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) டாட் மர்பி சுழலில் போல்டு ஆனார். அபாரமாக ஆடிய பேர்ஸ்டோ 78 ரன்னில் (103 பந்து, 11 பவுண்டரி) மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் சிக்கி பெவிலியன் திரும்பினார். அடுத்து கிறிஸ் வோக்ஸ் 1 ரன்னிலும், மொயீன் அலி 29 ரன்னிலும், மார்க்வுட் 9 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் இங்கிலாந்து அணி 80 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 389 ரன்கள் குவித்து 377 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. ஸ்டூவர்ட் பிராட் 2 ரன்னுடனும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டும், டாட் மர்பி 3 விக்கெட்டும் ஹேசில் வுட் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.

தொடக்கத்திலே ஜேம்ஸ் ஆண்டர்சன் 8 ரன்களில் மர்பி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 395 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு 384 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டும், டாட் மர்பி 4 விக்கெட்டும் ஹேசில் வுட் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 384 ரன்கள் இலக்குடன் விளையாடி வருகிறது.


Next Story