3-வது சுழற்பந்து வீச்சாளர் இடத்துக்கு குல்தீப் யாதவை பயன்படுத்த வேண்டும் - ரவி சாஸ்திரி யோசனை


3-வது சுழற்பந்து வீச்சாளர் இடத்துக்கு குல்தீப் யாதவை பயன்படுத்த வேண்டும் - ரவி சாஸ்திரி யோசனை
x

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 3-வது சுழற்பந்து வீச்சாளர் இடத்துக்கு குல்தீப் யாதவை பயன்படுத்த வேண்டும் என்று ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

நாக்பூர்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் 3-வது சுழற்பந்து வீச்சாளர் இடத்துக்கு குல்தீப் யாதவை பயன்படுத்த வேண்டும் என்று ரவிசாஸ்திரி கூறியுள்ளார். இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நேற்று அளித்த பேட்டி வருமாறு:-

இந்த தொடரில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும். ஆனால் அவரை வைத்து நீங்கள் அளவுக்கு அதிகமாக வியூகங்களை வகுக்ககூடாது. எந்த மாதிரி திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அவரது போக்கிலேயே விட்டுவிட வேண்டும். அஸ்வின் சுழல் ஜாலத்தில் மிரட்டினால், அது தான் தொடரை முடிவு செய்யும் வகையில் இருக்கும். பெரும்பாலான சீதோஷ்ண நிலையில் அவர் உலகத்தரம் வாய்ந்த பவுலராக விளங்குகிறார். அதுவும் உள்ளூரில் ஆடும் போது கலக்குவார். ஆடுகளத்தன்மை கைகொடுத்து, பந்து நன்கு சுழலத் தொடங்கினால் பெரும்பாலான பேட்ஸ்மேன்களை மிரள வைத்து விடுவார். எனவே அஸ்வின் குறித்து அதிகமாக சிந்திக்க வேண்டிய அவசியமில்லை.

என்னை பொறுத்தவரை 3-வது சுழற்பந்து வீச்சாளர் இடத்திற்கு குல்தீப் யாதவை சேர்த்தால் நன்றாக இருக்கும். ரவீந்திர ஜடேஜாவும், அக்ஷர் பட்டேலும் ஒரே மாதிரியாக பந்து வீசக்கூடியவர்கள். குல்தீப் யாதவ் அவர்களிடம் இருந்து மாறுபட்டவர். நீங்கள் டாசில் தோற்றால் அதன் பிறகு முதல் நாளில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பவுலர் தேவை. முதல் நாளிலேயே பந்தை சுழலை வைக்கும் வீரர் யார் என்றால் அது குல்தீப்தான்.

ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு பெரிய அளவில் ஒத்துழைக்காத பட்சத்திலும், குல்தீப் யாதவால் முக்கிய பங்களிப்பு அளிக்க முடியும். அது மட்டுமின்றி ஆட்டத்தில் போக போக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களின் மூலம் இருமுனையிலும் ஆடுகளத்தன்மையில் மாற்றம் ஏற்படும் போது, மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தி சுழற்பந்து வீசும் பவுலரால் தான் பந்தை நன்கு சுழலச் வைக்க முடியும். ஆடுகளம் முதல் நாளில் இருந்தே சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். டாஸில் தோற்றாலும் பரவாயில்லை.

இந்திய ஆடும் லெவன் அணியில் சூர்யகுமார் யாதவ் அல்லது சுப்மன் கில் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்வது கடினம். 5-வது வரிசைக்கு மிகச்சிறந்த வீரரை தேர்வு செய்தாக வேண்டும். சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடக்கூடியவர். இந்தியாவில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால், சீராக ரன் எடுக்க வேண்டும். பவுலர்கள் மெய்டன் ஓவர்களை வீசி நம் மீது ஆதிக்கம் செலுத்த விடக்கூடாது. 30 அல்லது 40 ரன்களை துரிதமாக எடுத்தாலும் அது ஆட்டத்தின் போக்கை முடிவு செய்வதாக அமையக்கூடும். சூர்யகுமார் அதிரடியாக ஆடி எதிரணியின் வியூகத்தை சிதைக்கக்கூடியவர்.

இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சமீப காலமாக இந்திய அணியின் மேட்ச் வின்னராக திகழ்ந்தார். ஒரு பேட்டராக எதிரணிக்கு அபாயகரமானவர். அவர் இல்லாதது இந்திய அணிக்கு நிச்சம் பின்னடைவு தான். தற்போது இஷான் கிஷன், கே.எஸ்.பரத் ஆகிய விக்கெட் கீப்பர்களில் யாரை தேர்வு செய்வது என்பது கடினமாகத் தான் இருக்கும். ஆடுகளத்தில் பந்து தாறுமாறாக சுழன்று திரும்பும் பட்சத்தில், அதற்கு ஏற்ப மிகச்சிறந்த கீப்பர் விளையாட வேண்டும்.

இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.


Next Story