உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் அஸ்வின் சேர்ப்பு
37 வயது ஆப்-ஸ்பின்னரான அஸ்வின் உலகக் கோப்பை அணிக்கு தேர்வாகி இருப்பது இது 3-வது முறையாகும்.
புதுடெல்லி,
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னதாக இடது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். இதனால் அண்மையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட்டார். 18 மாத இடைவெளிக்கு பிறகு ஒருநாள் அணிக்கு அழைக்கப்பட்ட அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு ஆட்டங்களில் ஆடி 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இந்த நிலையில் காயத்தில் சிக்கிய அக்ஷர் பட்டேல் முழுமையாக குணமடைய இன்னும் 3 வாரங்கள் ஆகும் என்பது தெரியவந்ததை அடுத்து அவர் உலகக்கோப்பை அணியிலிருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். வீரர்களை மாற்ற கடைசி நாளான நேற்று அவருக்கு பதிலாக அஸ்வின் சேர்க்கப்பட்டார். இனிமேல் வீரர்களை மாற்ற வேண்டும் என்றால் உலகக் கோப்பை டெக்னிக்கல் கமிட்டியிடம் அனுமதி பெற வேண்டியது அவசியமானதாகும்.
சென்னையை சேர்ந்த 37 வயது ஆப்-ஸ்பின்னராக அஸ்வின் உலகக் கோப்பை அணிக்கு தேர்வாகி இருப்பது இது 3-வது முறையாகும். அவர் ஏற்கனவே 2011, 2015-ம் ஆண்டு உலகக் கோப்பை அணியில் அங்கம் வகித்துள்ளார். அஸ்வின் சேர்க்கப்பட்டதன் மூலம் இந்த உலகக் கோப்பை போட்டியில் தமிழக வீரருக்கு இடமில்லை என்ற குறை நீங்கியது.
உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி வருமாறு:-
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், ஆர்.அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்.