நஜிபுல்லா ஜட்ரன் அதிரடி: ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி


நஜிபுல்லா ஜட்ரன் அதிரடி: ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி
x
தினத்தந்தி 30 Aug 2022 5:23 PM GMT (Updated: 30 Aug 2022 8:58 PM GMT)

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி, வங்காளதேசத்தை வீழ்த்தி 2-வது வெற்றியோடு அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

சார்ஜா,

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழையும்.

இந்த நிலையில் சார்ஜாவில் நேற்றிரவு அரங்கேறிய 3-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-வங்காளதேசம் பலப்பரீட்சை நடத்தின. 'டாஸ்' ஜெயித்த வங்காளதேச கேப்டன் ஷகிப் அல்-ஹசன் தைரியமாக பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய வங்காளதேசத்தை, ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரகுமான் மிரள வைத்தார். ஸ்டம்பை குறி வைத்து சுழல் தாக்குதலை தொடுத்த அவர் முகமது நைம் (6 ரன்), அனாமுல் ஹக் (5 ரன்), கேப்டன் ஷகிப் அல்-ஹசன் (11 ரன்) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றினார். ரஷித்கான் தனது பங்குக்கு விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிமை (1 ரன்) காலி செய்தார். 28 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து வங்காளதேச அணி தள்ளாடியது.

இதன் பின்னர் மேலும் 2 விக்கெட் சரிந்தாலும் மிடில் வரிசையில் மொசாடெக் ஹூசைன் நிலைத்து நின்று விளையாடி அணியை ஓரளவு மீட்டெடுத்தார். அவரும் 2 ரன்னில் வெளியேறி இருக்க வேண்டியது. அவர் தூக்கியடித்த பந்தை எல்லைக்கோடு அருகே ஒமர்ஷாய் கேட்ச் செய்தார். ஆனால் ஒமர்ஷாயின் ஷூ லேசாக பவுண்டரி எல்லையில் உரசியது ரீப்ளேயில் தெரியவந்ததால் தப்பித்த மொசாடெக் ஹூசைன், அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

20 ஓவர் முழுமையாக ஆடிய வங்காளதேசம் 7 விக்கெட்டுக்கு 127 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. மொசாடெக் ஹூசைன் 48 ரன்களுடன் (31 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் முஜீப் ரகுமான், ரஷித்கான் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

ஆப்கானிஸ்தான் வெற்றி

தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தானுக்கு வங்காளதேச பவுலர்கள் கடுமையாக அழுத்தம் கொடுத்த போதிலும் அவர்களின் வீறுநடைக்கு முட்டுக்கட்டை போட முடியவில்லை. ஆப்கானிஸ்தான் 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்ராகிம் ஜட்ரன் 42 ரன்களுடனும் (41 பந்து, 4 பவுண்டரி), நஜிபுல்லா ஜட்ரன் 43 ரன்களுடனும்( 17 பந்து, ஒரு பவுண்டரி, 6 சிக்சர்)அவுட் ஆகாமல் இருந்தனர்.

ஏற்கனவே இலங்கையை வீழ்த்தி இருந்த ஆப்கானிஸ்தானுக்கு இது 2-வது வெற்றியாகும். இதன் மூலம் 'பி' பிரிவில் முதலிடத்தை பிடித்த ஆப்கானிஸ்தான் முதல் அணியாக சூப்பர்4 சுற்றை எட்டியது. நாளை இலங்கை-வங்காளதேசம் சந்திக்கின்றன. இதில் வெற்றி பெறும் அணி இந்த பிரிவில் இருந்து 2-வது அணியாக சூப்பர்4 சுற்றுக்கு வரும்.


Next Story