ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு


ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு
x

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி வருகிற 20-ந்தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை,

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை நடக்கிறது. இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்தும் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான்- நேபாளம் அணிகள் மோதுகின்றன.

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை 2-ந்தேதி பல்லகெலேயில் சந்திக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது. போட்டி நெருங்கி வந்தாலும் இந்தியா இன்னும் அணியை அறிவிக்கவில்லை. காயத்துக்கு ஆபரேஷன் செய்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள பேட்ஸ்மேன்கள் லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக ஆசிய கோப்பை போட்டிக்கு திரும்ப வேண்டும் என்பதே இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் தேர்வு குழுவின் ஆசை.

அதனால் தான் அணித் தேர்வை தள்ளிப்போட்டுள்ளது. இருவரும் அங்கு உடல்தகுதியை மீட்டெடுக்கும் பயிற்சியுடன், சில ஆட்டங்களிலும் விளையாடி உள்ளனர். இதில் லோகேஷ் ராகுல் முழுமையாக தேறி விட்டார். ஸ்ரேயாஸ் அய்யர் பயிற்சியில் பேட்டிங் செய்தாலும், அவர் 100 சதவீதம் உடல்தகுதியுடன் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் ஸ்ரேயாஸ் அய்யர் ஆசிய கோப்பை போட்டிக்கு திரும்புவது சந்தேகம் தான்.

அத்துடன் முதுகு காயத்தில் இருந்து குணமடைந்து அயர்லாந்து தொடரில் விளையாடும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சு முன்பு போல் இருக்கிறதா என்பதை அறியவும் தேர்வு குழு விரும்புகிறது. அதனால் இன்றைய இந்தியா-அயர்லாந்து ஆட்டத்தை தேர்வு குழுவினர் உன்னிப்பாக கவனிப்பார்கள்.

அனேகமாக ஆசிய போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் (12 ரன், 7, 13, 9 மற்றும் 51 ரன்) பெரிய அளவில் ஜொலிக்காத சஞ்சு சாம்சனை கழற்றி விட தேர்வு குழு திட்டமிட்டுள்ளது. லோகேஷ் ராகுல், இஷான் கிஷன் ஆகிய இரு விக்கெட் கீப்பர்கள் இருக்கும் போது, சாம்சனின் பங்களிப்பு தேவை இருக்காது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அசத்திய இடக்கை பேட்ஸ்மேன் திலக் வர்மாவுக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம்.


Next Story