ஆசிய கோப்பை கிரிக்கெட்: அணிக்கு திரும்பும் முன்னணி வீரர்கள் - வெளியான புதிய தகவல்..?


ஆசிய கோப்பை கிரிக்கெட்: அணிக்கு திரும்பும் முன்னணி வீரர்கள் - வெளியான புதிய தகவல்..?
x

Image Courtacy: ICCTwitter

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்தத் தொடரில் மொத்தம் 13 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் 4 ஆட்டங்கள் பாகிஸ்தானிலும் மீதம் உள்ள 9 ஆட்டங்கள் இலங்கையிலும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காயம் காரணமாக நீண்டநாட்களாக ஓய்வில் இருந்து வரும் இந்திய அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் ஐயர், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது இவர்கள் இருவரும் பெங்களூருவில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பிசியோதெரபி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக பும்ரா, மெதுவான வகையில் பந்து வீச்சை தொடங்கி உள்ளார்.

முதுகுவலி காயம் காரணமாக அவதிப்பட்ட பும்ரா, கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்ற டி 20 கிரிக்கெட் தொடரில் இருந்து விளையாடவில்லை. தொடர்ந்து 2022-ம் ஆண்டு ஆசிய கோப்பை தொடர், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடர்களையும் பும்ரா தவறவிட்டார்.

ஸ்ரேயஸ் அய்யரும் முதுகு வலி காயத்தால் அவதிப்பட்டார்.இதனால் அவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது பேட் செய்ய களத்துக்கு வரவில்லை. தொடர்ந்து அவர், அந்த டெஸ்ட் தொடரில் இருந்து விலகி இருந்தார்.

இந்நிலையில் இருவரும் போட்டியில் ஆடுவதற்கான உடற்தகுதியை எட்டிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ஜஸ்பிரீத் பும்ராவும், ஸ்ரேயஸ் ஐயரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தேசிய கிரிக்கெட் அகாடமி வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.


Next Story