சிறந்த கிரிக்கெட் வீரராக பாபர் அசாம் தேர்வு..!
சிறந்த கிரிக்கெட் வீரராக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தேர்வாகி இருக்கிறார்.
துபாய்,
கடந்த ஆண்டுக்கான (2022) சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சிறந்த வீரர், வீராங்கனைகள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த ஆண்டுக்கான ஆண்கள் கிரிக்கெட்டில் சிறந்த வீரராக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தேர்வாகி இருக்கிறார்.
கடந்த ஆண்டில் எல்லா வகையான சர்வதேச போட்டிகளிலும் (ஒருநாள், 20 ஓவர், டெஸ்ட்) சேர்த்து அவர் 8 சதம், 17 அரைசதம் உள்பட 2,598 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் அவர் இந்த விருதை தட்டிச் சென்றுள்ளார். அத்துடன் அவர் ஒருநாள் போட்டியில் சிறந்த வீரராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதை அவர் தொடர்ந்து 2-வது முறையாக பெறுகிறார். ஏற்கனவே 2021-ம் ஆண்டிலும் இந்த விருதை பெற்று இருந்தார்.
கடந்த ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரராக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் நாட் சிவெர் கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை மற்றும் சிறந்த ஒருநாள் போட்டி வீராங்கனை ஆகிய இரட்டை விருதுகளை தட்டிச் சென்றார்.