அயர்லாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வங்காளதேச அணி 'திரில்' வெற்றி
அயர்லாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வங்காளதேச அணி ‘திரில்’ வெற்றி பெற்றது.
செம்ஸ்போர்டு,
வங்காளதேசம்-அயர்லாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் உள்ள செம்ஸ்போர்டில் நேற்று முன்தினம் நடந்தது. 'டாஸ்' ஜெயித்த அயர்லாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த வங்காளதேச அணி, அயர்லாந்து வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 48.5 ஓவர்களில் 274 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
அதிகபட்சமாக கேப்டன் தமிம் இக்பால் 69 ரன்னும், முஷ்பிகுர் ரஹிம் 45 ரன்னும், மெஹிதி ஹசன் மிராஸ் 37 ரன்னும், நஜ்முல் ஹூசைன் ஷன்டோ, லிட்டான் தாஸ் தலா 35 ரன்னும் எடுத்தனர். அயர்லாந்து அணி தரப்பில் மார்க் அடைர் 4 விக்கெட்டும், ஆன்டி மெக்பிர்னி, ஜார்ஜ் டாக்ரெல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய அயர்லாந்து அணியின் தொடக்க வீரர் ஸ்டீபன் டோஹினி 4 ரன்னில் ஆட்டம் இழந்தாலும், கேப்டன் ஆன்டி பார்பில்ரி (53 ரன்கள்), பால் ஸ்டிர்லிங் (60 ரன்கள்) ஆகியோர் நிலைத்து நின்று ஆடி நல்ல தொடக்கம் அளித்தனர். கடைசி 9 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 52 ரன்கள் தேவையாக இருந்தது. கைவசம் 7 விக்கெட் இருந்தது. ஆனால் அதன் பிறகு விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன.
கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டதால் பரபரப்பு நிலவியது. கடைசி ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மக்முத் 2 விக்கெட் வீழ்த்தியதுடன் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். 50 ஓவர்களில் அயர்லாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 269 ரன்களே எடுத்தது. இதனால் வங்காளதேச அணி 5 ரன் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றியை ருசித்தது. வங்காளதேச அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் முஸ்தாபிஜூர் ரகுமான் 4 விக்கெட்டும், ஹசன் மக்முத் 2 விக்கெட்டும் சாய்த்தனர்.
10-வது முறையாக 4 விக்கெட் வீழ்த்திய முஸ்தாபிஜூர் ரகுமான் ஆட்டநாயகன் விருது பெற்றார். வங்காளதேச வீரர் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ (196 ரன்கள், ஒரு விக்கெட்) தொடர்நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் வங்காளதேச அணி ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-வது ஆட்டத்தில் வங்காளதேசம் வென்று இருந்தது.