வலை பயிற்சியில் 90 நிமிடங்கள் இடைவிடாமல் பேட்டிங் செய்தேன் - வெற்றிக்கு பிறகு கோலி உருக்கம்..!!


வலை பயிற்சியில் 90 நிமிடங்கள் இடைவிடாமல் பேட்டிங் செய்தேன் - வெற்றிக்கு பிறகு கோலி உருக்கம்..!!
x

அணியின் வெற்றிக்கு வித்திட்ட கோலிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

மும்பை,

ஐ.பி.எல் கிரிக்கெட்டின் நேற்று நடைபெற்ற 67-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள பெங்களூரு அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் விளையாடியது.

அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் அதிரடியால் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியசத்தில் வெற்றி பெற்றது . இதில் பெங்களூரு அணியில் அதிகபட்சமாக கோலி 73 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

தொடர்ச்சியாக முதல் 13 லீக் போட்டிகளில் ரன்கள் குவிக்க கோலி திணறி வந்தார். அதில் 3 கோல்டன் டக்கும் அடங்கும். இந்த நிலையில் நேற்றைய போட்டியில் கோலி மிகவும் அற்புதமாக விளையாடியது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அணியின் வெற்றிக்கு வித்திட்ட கோலிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

ஆட்ட நாயகன் விருதை வாங்கிய பின் கோலி மிகவும் உருக்கமாக பேசினார். ஹர்ஷா போக்லே எழுப்பிய பல கேள்விகளுக்கு கோலி பதில் அளிக்கையில், " இது எங்களுக்கு மிகவும் முக்கியமான போட்டி. எனது அணிக்காக நான் அதிகம் பங்களிப்பு செய்யவில்லை என்று நான் ஏமாற்றமடைந்து இருந்தேன். என்னுடைய தனிப்பட்ட சாதனைகளை விட அணிக்கு பங்களிக்காமல் இருந்தது தான் என்னை வருத்தியது .

இன்று எனது ஆட்டம் எங்கள் அணிக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆட்டமாக இருந்தது. இது எங்களை நல்ல நிலையில் கொண்டு சென்று நிறுத்தும். அணிக்கு நல்ல ஆட்டங்களை ஆடியிருப்பதால் என் மீது எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கவே செய்யும்.

எனவே எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும் என நான் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறேன். நான் நேற்று வலை பயிற்சியின் போது 90 நிமிடங்கள் இடைவிடாமல் பேட் செய்தேன். அது இன்று எனக்கு பெரிதும் உதவியது." என கோலி தெரிவித்தார்.


Next Story