'பேட்ஸ்மேன்கள் ரன்களை திருடப்பார்க்கின்றனர்' - தென்னாப்பிரிக்க முன்னாள் பேஸ்ட்மேன் ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
கொழும்பு,
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2வது ஒருநாள் போட்டி நேற்று முன் தினம் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 49.5 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றிபெற்றது.
இந்த போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான் 35 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த நிலையில் மன்கட் முறையில் ரன் அவுட் ஆனார். கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட போது ஷதாப் கான் களத்தில் இருந்தார். ஷதாப் கான் ஸ்டிரைக்கர் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த நிலையில் பரூக்கி பந்து வீசினார்.
அப்போது பந்தை வீசுவதற்கு முன் ஷதாப் கான் கிரீசை விட்டு வெளியே சென்றார். உடனடியாக சுதாரித்துக்கொண்ட பரூக்கி மன்கட் முறையில் ஷதாப் கானை அவுட் ஆக்கினார்.
ஷதாப் கான் அவுட் ஆனாலும் இறுதியில் நஷீம் ஷா பேட்டிங்கால் பாகிஸ்தான் 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
அதேவேளை, ஷதாப் கான் மன்கட் முறையில் அவுட் ஆக்கப்பட்டது தொடர்பாக பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் பரீத் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
போட்டி வர்ணனையாளர் ஹெச்.டி. அகர்மென் கூறுகையில், மன்கட் அவுட் முறை பற்றி எனக்கு பிரச்சினையில்லை. ஆனால், எந்த அணியும் 5வது அல்லது 6வது ஓவரில் ஏன் மன்கட் முறையில் அவுட் செய்யவில்லை? ஆட்டத்தின் கடைசி ஓவரின் போது மட்டும் ஏன் மன்கட் அவுட் செய்கின்றனர்? அணி பயப்படுகிறது. போட்டியில் வெற்றிபெற மன்கட் அவுட் மட்டுமே ஒரே வழி என அந்த அணி கருதுகிறது' என்றார். அவரது கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியது தான்' என பரீத் கான் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாக். பத்திரிக்கையாளர் பரீத் கானின் கருத்துக்கு தென்னாப்பிரிக்கா முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பரீத் கானின் டுவிட்டை மேற்கோள்காட்டி ஏபி டிவில்லியர்ஸ் வெளியிட்ட பதிவில், ஏனென்றால் பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தின் இறுதியிலேயே ரன்களை திருட முயற்சிக்கின்றனர்' என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையேயான 3 வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.