பணமழையில் நனையப் போகும் இந்திய கிரிக்கெட் வாரியம்; கோடிகளை அள்ளுகிறது...!
வரும் ஆண்டுகளில் பிசிசிஐயின் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி,
கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பதோடு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மத்திய அரசிற்கும் அதிகவரி கட்டுகிறது. பிசிசிஐ 2021-22 நிதியாண்டில் ரூ.1,159 கோடி வருமான வரி கட்டி உள்ளது.
ராஜ்யசபாவில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி, பிசிசிஐ செலுத்திய வருமான வரி விவரங்களை தெரிவித்து உள்ளார். மேலும் கடந்த 5 ஆண்டுகளில் பிசிசிஐயின் வருவாய், செலவுகள் மற்றும் வரிகள் குறித்தும் அவர் கூறியுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
பிசிசிஐ 2021-22 நிதியாண்டில் ரூ.1,159.20 கோடி வருமான வரி செலுத்தி உள்ளது.
2020-21- ரூ.844.92 கோடி
2019-20- ரூ.882.29 கோடி
2018-19- - ரூ.815.08 கோடி
மற்றும் 2017-18ல் ரூ.596.63 கோடி வருமான வரி செலுத்தி உள்ளது.
2021-22 ஆம் ஆண்டில், பிசிசிஐ ரூ.7,606 கோடி வருவாய் ஈட்டியுள்ளது, அதே நேரத்தில் அதன் செலவு ரூ.3,064 கோடியாக இருந்தது.
2020-21ல் பிசிசிஐயின் வருமானம் ரூ.4,735 கோடியாகவும், செலவு ரூ.3,080 கோடியாகவும் இருந்தது.
2019-20ல் ரூ.4972.43 கோடி வருவாய் ஈட்டப்பட்டு ரூ.2268.76 கோடி செலவிடப்பட்டுள்ளது.
2018-19ல் ரூ.7181.61 கோடி வருவாய் ஈட்டப்பட்டு ரூ.4652.35 கோடி செலவிடப்பட்டுள்ளது.
2017-18ல் ரூ.2916.67 கோடி வருவாய் ஈட்டப்பட்டு ரூ.2105.50 கோடி செலவிடப்பட்டுள்ளது.
வரும் ஆண்டுகளில் பிசிசிஐயின் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021-22 நிதியாண்டு முதல் ஐபிஎல் ஊடக உரிமை ஒப்பந்தங்களில் Viacom18 உடன் ரூ.23,757.5 கோடி (டிஜிட்டல்) மற்றும் ரூ.1058 கோடி (மூன்று உலகப் போட்டிகள்) மற்றும் டிஸ்னி ஸ்டாருடன் ரூ.23,575 கோடி (தொலைக்காட்சி உரிமை) ஒப்பந்தம் செய்துள்ளனர்.
பெண்கள் பிரிமியர் லீக் அணிகள் ரூ.4669 கோடிக்கு விற்கப்பட்டன. இதன் ஊடக உரிமை ரூ.951 கோடிக்கு Viacom18 நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது.
ஐசிசியின் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) வருமானத்தில் 38.5 சதவீதம் பிசிசிஐக்கு கிடைக்கும். இதன் மூலம் ஓராண்டில் சுமார் ரூ.1,906.34 கோடி வருவாய் கிடைக்கும்.