நடப்பு ஐ.பி.எல்.-ல் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் மட்டுமே செய்வார்... பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி தகவல்


நடப்பு ஐ.பி.எல்.-ல் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் மட்டுமே செய்வார்... பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி தகவல்
x

கால்முட்டி காயத்தால் அவதிப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் மட்டுமே செய்வார், பந்து வீசமாட்டார் என்று பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி கூறியுள்ளார்.

சென்னை,

10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மல்லுகட்டுகின்றன. கடந்த ஆண்டு குஜராத்துக்கு எதிரான இரு ஆட்டங்களிலும் தோல்வி அடைந்த சென்னை அணி அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் ஆயத்தமாகி வருகிறது. முன்னதாக அரைமணி நேரம் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன. நடிகைகள் ராஷ்மிகா, தமன்னா உள்ளிட்டோர் நடனம் ஆடுகிறார்கள்.

இந்த போட்டிக்காக டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சேப்பாக்கத்தில் கடந்த 2 வாரமாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். சென்னை அணியினர் இன்று மாலை ஆமதாபாத் புறப்பட்டு செல்கிறார்கள்.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சுக்கு வலுசேர்க்கும் வகையில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சை ரூ.16¼ கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் ஏலத்தில் எடுத்தது. டோனிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டனாக அவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஸ்டோக்சுக்கு சிக்கல்

ஆனால் நடப்பு ஐ.பி.எல்.-ல் பென் ஸ்டோக்ஸ் தொடக்க கட்டத்தில் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடுவார், பந்து வீசமாட்டார் என்பது தெரிய வந்துள்ளது. 31 வயதான பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது இடது முழங்காலில் காயமடைந்தார். வலி குறைவதற்காக முட்டியில் ஊசி போடப்படுகிறது. அவரது காயம் சீரியசாகி விடக்கூடாது என்பதில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கவனமுடன் உள்ளது. ஏனெனில் ஐ.பி.எல்.-க்கு பிறகு இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவுடன் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதனால் பந்து வீசி ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று அவருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவுரை வழங்கியுள்ளது.

இது குறித்து சென்னை சூப்பர் கிங்சின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி கூறுகையில், 'ஐ.பி.எல்.-ல் ஒரு பேட்ஸ்மேனாக தொடக்கத்தில் இருந்தே விளையாடுவதற்கு பென் ஸ்டோக்ஸ் தயாராக இருப்பதை அறிகிறேன். அவர் சென்னை வந்தது முதலே பேட்டிங் பயிற்சியில் உண்மையிலேயே நன்றாக ஆடினார். ஆனால் அவர் பந்து வீசுவதை பார்க்க நாம் காத்திருக்க வேண்டியது வரும். இரு தினங்களுக்கு முன்பு தான் அவர் லேசாக பந்து வீசி பயிற்சி எடுத்தார். அவரது காயத்தன்மை எப்படி இருக்கிறது என்பதை உன்னிப்பாக கண்காணிக்கும் சென்னை சூப்பர் கிங்சின் உடல் தகுதி நிபுணர், இந்த விஷயத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து பணியாற்றுகிறார்.

ஸ்டோக்ஸ் ஐ.பி.எல்.-ல். தொடக்க கட்ட ஆட்டங்களில் பந்து வீசமாட்டார் என்பதை நான் புரிந்து கொண்டுள்ளேன். அவர் பவுலிங் செய்வதற்கு சில வாரங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் 100 சதவீதம் உறுதியாக சொல்ல முடியாது. என்றாலும் தொடரில் போக போக ஏதாவது ஒரு கட்டத்தில் பந்து வீசுவார் என்று நம்புகிறேன். என்னை பொறுத்தவரை அவர் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஐ.பி.எல்.-ல் 2019-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக உள்ளூர் மைதானமான சேப்பாக்கத்தில் நாங்கள் களம் காண உள்ளோம். புதுப்பிக்கப்பட்ட இந்த மைதானம் அருமையாக இருக்கிறது. முதல் ஆட்டத்தில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழியும் என்பதால் இந்த சூழல் அற்புதமாக இருக்கப்போகிறது. நிச்சயம் இந்த சூழலை பென் ஸ்டோக்ஸ் விரும்புவார். ரசிகர்களின் உற்சாகத்துக்கு மத்தியில் அவரது மிகச்சிறந்த ஆட்டம் வெளிப்படும் என்று நம்புகிறேன். உள்ளூரில் விளையாடுவதை பார்க்க ஆர்வமுடன் உள்ளேன்' என்றார்.


Next Story