"சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு குடும்பத்தை போன்றது!" - அஜின்கியா ரஹானே
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு குடும்பத்தை போன்றது என்று அஜின்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.
மும்பை,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 12-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், மும்பை இந்தியன்சும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 18. 2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ரஹானே 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
போட்டி முடிந்த பிறகு சென்னை அணி வீரர் அஜின்கியா ரஹானே கூறியதாவது:-
"சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை ஏலத்தில் எடுத்தபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரருக்கும் சி.எஸ்.கே-வில் எப்படி மரியாதை கொடுப்பார்கள் என பல வீரர்கள், இதற்கு முன்பே என்னிடம் கூறியுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு குடும்பத்தை போன்றது.
டோனி தலைமையில் பல போட்டிகள் விளையாடி உள்ளேன். சி.எஸ்.கே-வில் டோனி தலைமையில் கீழ் விளையாடியது இதுவே முதல்முறை. அணியில் உள்ள சிறப்பான சூழல் போட்டிகளில் நேர்த்தியாக விளையாட உதவுகிறது" என்று கூறியுள்ளார்.