உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆன்லைன் டிக்கெட் விற்பனை 25-ந்தேதி தொடக்கம்


உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆன்லைன் டிக்கெட் விற்பனை 25-ந்தேதி தொடக்கம்
x

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 9 ஆட்டங்களின் தேதி மற்றும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. இதற்கான போட்டி அட்டவணை கடந்த ஜூன் 27-ந்தேதி வெளியிடப்பட்டது. அக்.5-ந்தேதி ஆமதாபாத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஆனால் போட்டி அட்டவணை வெளியான சில நாட்களிலேயே பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட ஆட்டங்களின் தேதியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் மொத்தம் 9 ஆட்டங்களின் தேதி மற்றும் நேரங்களில் மாற்றம் செய்து திருத்தப்பட்ட புதிய போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. ஆனால் இடங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அக்டோபர் 15-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அன்றைய தினம் அங்கு நவராத்திரி கொண்டாட்டம் தொடங்குவதால் முக்கியமான இந்த போட்டிக்கு பாதுகாப்பு அளிப்பது சிரமம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது அந்த ஆட்டம் ஒரு நாள் முன்னதாக அதாவது அக்டோபர் 14-ந் தேதி அதே மைதானத்தில் நடைபெறுகிறது.

இதனால் பாகிஸ்தான் அணிக்கு போதுமான இடைவெளி கிடைக்க வேண்டும் என்பதற்காக இலங்கைக்கு எதிராக அந்த அணியின் ஆட்டம் அக்டோபர் 12-ந்தேதிக்கு பதிலாக 10-ந்தேதிக்கு (ஐதராபாத்) செல்கிறது.

இதே போல் பாகிஸ்தான்- இங்கிலாந்து இடையிலான லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டனில் நவம்பர் 12-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டது. அன்றைய தினம் உள்ளூரில் காளி பூஜை வெகுவிமரிசையாக நடக்க இருப்பதால் போதுமான பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம் என்று கொல்கத்தா போலீசார் கைவிரித்தனர். இதனால் அந்த ஆட்டம் இப்போது ஒரு நாள் முன்னதாக 11-ந்தேதி நடக்கிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது. அன்று இந்திய அணி அல்லாத மற்ற ஆட்டங்கள் மற்றும் பயிற்சி ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய அணி மோதும் போட்டிக்குரிய டிக்கெட்டுகள் வருகிற 30-ந்தேதி முதல் செப்டம்பர் 3-ந்தேதி வரை கிடைக்கும். அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந்தேதி விற்கப்படும். மேலும் ரசிகர்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் இணையதளத்தில் வருகிற 15-ந்தேதி முதல் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டால், அவர்களுக்கு டிக்கெட் விற்பனை தொடர்பான தகவல்கள் முதலிலேயே தெரிவிக்கப்படும். இது அவர்களுக்கு டிக்கெட் கிடைக்க கூடுதல் வாய்ப்பாக இருக்கும் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.


Next Story