விமர்சனங்கள் எதிரொலி: லக்னோ ஆடுகளத்தின் பராமரிப்பாளர் அதிரடி நீக்கம்
லக்னோ போட்டிக்குரிய ஆடுகளம் மோசமாக இருந்ததால் அதன் பராமரிப்பாளர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இரு அணியின் பேட்ஸ்மேன்களும் ரன் எடுக்க விழிபிதுங்கினர். நியூசிலாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 99 ரன் மட்டுமே எடுத்து அடங்கியது.
இந்த எளிய இலக்கை கூட இந்திய அணியால் ஒரு பந்து மீதம் வைத்துத் தான் எட்ட முடிந்தது. அந்த அளவுக்கு ஆடுகளம் (பிட்ச்) சுழற்பந்து வீச்சுக்கு தாறுமாறாக ஒத்துழைத்தது. மொத்தம் 30 ஓவர்களை சுழற்பந்து வீச்சாளர்களே வீசினர். 239 பந்துகள் வீசப்பட்ட போதிலும் ஒரு சிக்சர் கூட அடிக்கப்படவில்லை. உலகின் 'நம்பர் ஒன்' பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் முதல்முறையாக ஒரு ஓவரை மெய்டனாக்கிய அரிய நிகழ்வையும் பார்க்க முடிந்தது.
இது 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு ஏற்ற ஆடுகளம் அல்ல என்று விமர்சனங்கள் எழுந்தன. இது மிகவும் அதிர்ச்சிகரமான ஆடுகளமாக இருந்தது என்று இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா வெளிப்படையாக குறை கூறினார்.
இந்த நிலையில் தரமற்ற ஆடுகள விமர்சனங்கள் எதிரொலியாக லக்னோ ஆடுகள பராமரிப்பாளர் சுரேந்திர குமாரை உத்தரபிரதேச கிரிக்கெட் சங்கம் தடாலடியாக நேற்று நீக்கியது. அவருக்கு பதிலாக சஞ்சீவ் குமார் அகர்வால் ஆடுகளத்தின் புதிய பராமரிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து உத்தரபிரதேச கிரிக்கெட் சங்க மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், '20 ஓவர் போட்டிக்கு முன்பாக மைதானத்தின் மையப்பகுதியில் உள்ள ஆடுகளங்களில் நிறைய முதல்தர போட்டிகள் நடத்தப்பட்டன. ஆடுகள பராமரிப்பாளர் ஒன்று அல்லது இரு ஆடுகளங்களை சர்வதேச போட்டிக்கு என்று ஒதுக்கி இருக்க வேண்டும்.
கான்பூரில் உள்ள கிரீன் பார்க் சர்வதேச மைதானத்தில் சில பிரச்சினைகளை சரி செய்ய வேண்டி இருந்ததால் இந்த முறை நிறைய உள்ளூர் போட்டிகளை லக்னோவில் நடத்த வேண்டியதாகி விட்டது. இதனால் இந்த ஆடுகளம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டதால் அதன் தன்மை மோசமாகி விட்டது. அத்துடன் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை காரணமாக ஆடுகளத்தை உயிரோட்டத்துடன் வைத்துக் கொள்ள முடியவில்லை. வேறு ஆடுகளத்தை தயார்படுத்துவதற்கு போதிய நேரமும் இல்லை.
இனி இங்குள்ள ஆடுகள தயாரிப்பு வேலையை கவனிக்க உள்ள சஞ்சீவ் குமார் அகர்வால் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். ஏற்கனவே பெங்களூரு மைதானத்தில் பிட்ச் பராமரிப்பு பணியை செய்துள்ளார். ஆடுகளத்தை சிறப்பான முறையில் உருவாக்க இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மூத்த ஆடுகள பராமரிப்பாளர் தபோஷ் சட்டர்ஜீயுடன் இணைந்து பணியாற்றுவார்' என்று கூறினார்.