'ஆஸ்திரேலியாவை பெரிய அணியாக நினைக்கமாட்டோம்'- மந்தனா


ஆஸ்திரேலியாவை பெரிய அணியாக நினைக்கமாட்டோம்- மந்தனா
x

காமன்வெல்த் விளையாட்டு போட்டி வருகிற 28-ந்தேதி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் தொடங்குகிறது.

பெங்களூரு,

காமன்வெல்த் விளையாட்டு போட்டி வருகிற 28-ந்தேதி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் தொடங்குகிறது. இந்த போட்டியில் முதல்முறையாக பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு கோலாலம்பூர் காமன்வெல்த் விளையாட்டில் ஆண்கள் ஒரு நாள் கிரிக்கெட் இடம் பெற்றிருந்தது. அதன் பிறகு காமன்வெல்த் விளையாட்டில் இப்போது தான் கிரிக்கெட் திரும்புகிறது.

இதில் களம் காணும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பார்படோஸ் ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 20 ஓவர் கிரிக்கெட்டில் 5 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை 29-ந்தேதி எதிர்கொள்கிறது.

இதையொட்டி பெங்களூருவில் இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா நேற்று வாணொலி வாயிலாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் 'நிறைய தொடர்களில் ஆஸ்திரேலியாவுடன் நாங்கள் தொடக்க ஆட்டங்களில் மோதியுள்ளோம். 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டை பொறுத்தவரை, எந்த அணியாலும் எந்த அணியையும் தோற்கடிக்க முடியும். ஆஸ்திரேலியாவை பெரிய அணி என்று சொல்ல மாட்டேன். அத்தகைய மனநிலையில் அவர்கள் இருப்பதையும் விரும்பமாட்டேன். லீக் சுற்றில் மூன்று அணிகளுக்கு எதிரான ஆட்டங்களும் எங்களுக்கு முக்கியமானது. அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெறுவதை எதிர்நோக்கி உள்ளோம்.

இந்த போட்டியில் எங்களது இலக்கு தங்கப்பதக்கம் தான். ஏதாவது ஒரு பதக்கம் போதும் என்ற நினைப்பில் விளையாடமாட்டோம். ஏனெனில் தங்கப்பதக்கத்தை வெல்லும் போது தான், தேசிய கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்படும். அது தான் நமக்கு மிகச்சிறந்த உணர்வை தரும்' என்றார்.


Next Story