தனது 100-வது டெஸ்ட் போட்டியில் பல்வேறு சாதனைகளை படைத்த டேவிட் வார்னர்


தனது 100-வது டெஸ்ட் போட்டியில் பல்வேறு சாதனைகளை படைத்த டேவிட் வார்னர்
x

இந்த போட்டியில் வார்னர் 81 ரன்களை எடுத்த போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்தார்.

மெல்போர்ன்,

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இரட்டை சதம் விளாசி அசத்தினார். இது அவரது 100-வது டெஸ்ட் என்பதால் சாதனையாக பதிவானது.

மெல்போர்ன் டெஸ்ட்

ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 189 ரன்னில் சுருண்டது. வேகப்பந்து வீச்சாளர் கேமரூன் கிரீன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்க நாளில் ஒரு விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்திருந்தது. டேவிட் வார்னர் 32 ரன்னுடனும், மார்னஸ் லபுஸ்சேன் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் முழுமையாக கோலோச்சினர். குறிப்பாக வார்னர் அதிரடியாக விளையாடி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். லபுஸ்சேன் 14 ரன்னில் தேவையில்லாமல் ரன்-அவுட் ஆனார். அடுத்து வார்னருடன், முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் ஜோடி போட்டார்.

இருவரும் தென்ஆப்பிரிக்க தாக்குதலை திறம்பட சமாளித்து ரன் திரட்டினர். 99 டிகிரி வெயில் சுட்டெரித்த போதிலும் வார்னரின் ரன்வேட்டை ஓயவில்லை. பவுண்டரி அடித்து 144 பந்துகளில் தனது 25-வது சதத்தை நிறைவு செய்த அவர் தன் மீதான விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். டெஸ்டில் 2020-ம் ஆண்டு ஜனவரிக்கு பிறகு அவர் அடித்த முதல் சதம் இதுவாகும்.

சதத்தில் சதம்

வார்னருக்கு இது 100-வது டெஸ்ட் போட்டியாகும். இதன் மூலம் 100-வது டெஸ்டில் சதம் விளாசிய 10-வது வீரர் என்ற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

தொடர்ந்து வார்னரும், சுமித்தும் ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு ஓடவிட்டனர். கேஷவ் மகராஜின் சுழலில் வார்னர் 2 சிக்சர்களை விரட்டினார். சுமித்துக்கு அதிர்ஷ்டமும் துணை நின்றது. அவர் 39 ரன்னில், ரபடாவின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் வெரைனிடம் கேட்ச் ஆனார். ஆனால் ரபடா காலை கிரீசுக்கு வெளியே வைத்து நோ-பாலாக வீசியது தெரிய வந்ததால் சுமித்துக்கு மறுவாழ்வு கிடைத்தது. அரைசதத்தை கடந்த சுமித் 85 ரன்களில் (161 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டமிழந்தார். சுமித்- வார்னர் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 239 ரன்கள் சேர்த்தது கவனிக்கத்தக்கது.

அடுத்து டிராவிஸ் ஹெட் நுழைந்தார். மறுபுறம் தென்ஆப்பிரிக்க பந்து வீச்சை துவம்சம் செய்த, வார்னர் ஸ்லிப்பில் பவுண்டரியுடன் 3-வது இரட்டை சதத்தை பதிவு செய்தார். மேலும் தனது 100-வது டெஸ்டில் இரட்டை சதம் நொறுக்கிய 2-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஜோ ரூட் மட்டுமே இதற்கு முன்பு 100-வது டெஸ்டில் இரட்டை சதம் அடித்தவர் ஆவார். அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் 218 ரன்கள் குவித்திருந்தார். அந்த அரிய சாதனை பட்டியலில் தன்னையும் வார்னர் இணைத்துக் கொண்டார்.

காயத்தால் இருவர் விலகல்

200 ரன்களை தொட்டதும் உற்சாகத்தில் மிதந்த வார்னர், துள்ளி குதித்தார். அப்போது அவரது கால் சற்று அழுத்தமாக தரையில் ஊன்றியதில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. ஏற்கனவே ஆட்டத்தின் போது ஓரிரு முறை இது போன்ற பிடிப்பு பிரச்சினைக்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட அவருக்கு இடது காலில் வலி அதிகமானது. இதையடுத்து வேறு வழியின்றி 200 ரன்களுடன் (254 பந்து, 16 பவுண்டரி, 2 சிக்சர்) 'ரிட்டயர்ஹர்ட்' ஆகி வார்னர் வெளியேறினார்.

அடுத்து இறங்கிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனுக்கு (6 ரன்) அன்ரிச் நோர்டியா சற்று பவுன்சாக வீசிய பந்து அவரது கையை பலமாக தாக்கியது. இதில் வலதுகை ஆள்காட்டி விரலில் ரத்தம் கொட்டியது. இதனால் அவரும் பாதியிலேயே வெளியேற நேரிட்டது.

ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 91 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 386 ரன்கள் குவித்து மொத்தம் 197 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையை எட்டியுள்ளது. டிராவிஸ் ஹெட் 48 ரன்னுடனும் (48 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 9 ரன்னுடனும் அவுட் ஆகாமல் உள்ளனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

8 ஆயிரம் ரன்களை கடந்தார் வார்னர்

* இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் வார்னர் 81 ரன்களை எடுத்த போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்தார். இந்த மைல்கல்லை அடைந்த 8-வது ஆஸ்திரேலிய வீரர் இவர் ஆவார். வார்னர் இதுவரை 100 டெஸ்டுகளில் விளையாடி 25 சதம், 34 அரைசதங்கள் உள்பட 8,122 ரன்கள் எடுத்துள்ளார்.

* 36 வயதான டேவிட் வார்னர் தனது 100-வது ஒரு நாள் போட்டியிலும் சதம் (2017-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக 124 ரன்) அடித்திருந்தார். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி இரண்டிலும் தனது 100-வது போட்டியில் சதம் அடித்த 2-வது வீரர் என்ற சிறப்பை பெற்றிருக்கிறார். ஏற்கனவே வெஸ்ட் இண்டீசின் கார்டன் கிரீனிட்ஜ் இச்சாதனையை செய்திருக்கிறார்.

* ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர்) வார்னர் தொடக்க வீரராக பதிவு செய்த 45-வது சதமாகும். இதன் மூலம் தொடக்க வீரராக களம் இறங்கி அதிக சதங்கள் அடித்தவரான இந்தியாவின் சச்சின் தெண்டுல்கரின் சாதனையை (45 சதம்) சமன் செய்தார்.


Next Story